சிறைச்சாலைகளில் செல்போன்கள்... - Dinamani - Tamil Daily News

சிறைச்சாலைகளில் செல்போன்கள்...

First Published : 24 September 2013 03:45 AM IST


தமிழக சிறைகளில் செல்போன்களின் புழக்கம் அதிகமாகியுள்ளதாக ஊடகங்களில் செய்திகளும் புகைப்பட ஆதாரங்களும் வந்துகொண்டிருக்கின்றன.

சமூகத்தில் செல்போன்கள் பரவலாக புழக்கத்தில் வந்த நாள் முதலாகவே சிறைகளிலும் செல்போன்களின் புழக்கம் இருந்துதான் வருகிறது.

பணம் படைத்த சிறைக் கைதிகளால்தான் சிறைக்குள் செல்போன்கள் நுழைந்தன. பெரிய அளவிலான ஊழல் மற்றும் மோசடி வழக்குகளில் சிறை செல்லும் விஐபி கைதிகள், பல்வேறு காரணங்களுக்காக வெளியுலகில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்வதற்கு சிறை அதிகாரிகளின் உதவியோடு செல்போன்களை பயன்படுத்தத் தொடங்கினர். ஒரு கொலை வழக்கில் சிறையில் இருந்த வாரிசுத் தலைவரிடம் எப்போதும் ஐந்து செல்போன்கள் இருந்தன என்று கூறுகின்றன சிறை வட்டாரங்கள்.

செல்போன்களின் புழக்கத்தைத் தொடர்ந்து சிறைத் துறையும் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அவ்வப்போது கைதிகளிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும், செல்போன்களின் புழக்கம் குறையவில்லை. கைதிகள் செல்போன்களைப் பயன்படுத்தி, சிறைக்கு வெளியே குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் கைதிகள் செல்போன் உபயோகிப்பது ஒரு வகையில் காவல் துறைக்கு பயன்தரும் வகையில் இருக்கிறது. முக்கியமான கைதிகள் மற்றும் தீவிரவாரதச் செயலில் ஈடுபடும் கைதிகள் சிறைக்குள் பயன்படுத்தும் செல்போன்களின் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதன் மூலம், உளவுத் துறைக்கு பல்வேறு தகவல்கள் தெரிய வருகின்றன. இதனால் பல நேரங்களில் உளவுத்துறையினரே, கைதிகள் செல்போன்களைப் பயன்படுத்துவதை கண்டுகொள்ளாமல் அனுமதிக்கின்றனர் என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத உளவுத் துறை அதிகாரி ஒருவர்.

2008-ஆம் ஆண்டில் புழல் சிறையில் இருந்த ஒரு கைதி, திருநெல்வேலியில் உள்ள மற்றொரு கைதியோடு செல்போன் மூலமாக உரையாடி தீவிரவாதச் செயலில் ஈடுபட முயன்றதாக காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, தமிழக சிறைகளில் 2010-ஆம் ஆண்டில்  340 செல்போன்களும், 2011-ஆம் ஆண்டில் 422 செல்போன்களும், 2012-ஆம் ஆண்டு 704 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 30 ஜூன் வரையிலான காலத்தில் 2013-ஆம் ஆண்டில் மட்டுமே 342 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்படி கைதிகளிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும்போது சில நேரங்களில் சிறை விதிகளின்படி தண்டனை தரப்படுகிறது. சில சமயங்களில் காவல் துறையில் புகார் செய்து வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. ஏற்கெனவே ஆயுள் தண்டனை பெற்றுள்ள சிறைக் கைதிகள் செல்போன் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் கூட, அந்த ஆறு மாத தண்டனை ஏற்கெனவே அவர்கள் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனையோடு சேர்ந்துவிடும் என்பதால், பெரும்பாலான கைதிகள் இந்த தண்டனையை பெரிதாகக் கருதுவதில்லை.

சிறைக்குள் செல்போன் வருவது எப்படி?

இந்த செல்போன்கள் சிறைக்குள் எப்படிப் போகின்றன என்று பார்த்தால், பெரும்பாலும் சிறை அலுவலர்களின் துணையுடன்தான் போகின்றன என்று கூறுகிறார்கள். கைதிகள் சிறைக்குள் செல்லுகையில் ஐந்து அல்லது ஆறு முறை முழுக்க முழுக்க சோதனையிடப்படுகிறார்கள். அப்படி இருக்கையில் இத்தனை சோதனைகளையும் தாண்டி கைதிகள் சிறைக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அறவே வாய்ப்பில்லை. ஆனால், சிறைக்குள் செல்போன் வைத்திருக்கும் கைதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் எப்படி சிறைக்குள் செல்போன் வந்தது என்பது குறித்து எந்த விசாரணையும் நடத்தியதாகத் தெரியவில்லை. சிறை அதிகாரிகளின் வருமானத்துக்கும் இந்த செல்போன்கள் பெருமளவில் உதவியாக இருப்பதால், செல்போன்களின் நடமாட்டத்தைக் கண்டும் காணாமல் சிறை அதிகாரிகள் விட்டு விடுகிறார்கள் என்ற கருத்தும் உள்ளது.

"கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்'

இது குறித்து கருத்து தெரிவித்த சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஜே.கே.திரிபாதி ""சிறைக்குள்

அடிக்கடி தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து சோதனைகள் நடத்தி, பல்வேறு செல்போன்களை பறிமுதல் செய்திருக்கிறோம். சிறைக் கைதிகள் மட்டுமின்றி சிறைக் காவலர்களையும் கடுமையாக சோதனையிடுகிறோம். ஏதாவது தவறு நடந்தது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி தொடர்ந்து நடத்தப்படும் சோதனைகளால் செல்போன் நடமாட்டம் பெருமளவில் குறைந்துள்ளது'' என்றார்.

 சிறைக்குள் உள்ள கைதிகளை கண்காணிக்கும் பொருட்டு, 2002-ஆம் ஆண்டு சிறைக்குள்ளேயே ஒரு கண்காணிப்புக் குழுவை அரசு ஏற்படுத்தியது. அந்த கண்காணிப்புக் குழுவில் சிறை அலுவலர்களைத் தவிர்த்து, காவல்துறையினரும் நியமிக்கப்பட்டனர். காவல்துறையினருக்கும் சிறை அலுவலர்களுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் காரணமாகவும் செல்போன்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது. ஆனால் இதைச் சுட்டிக்காட்டி கேட்டபோது சிறைத்துறை கூடுதல் டிஜிபி திரிபாதி இதை மறுத்தார். மேலும் ஊடகங்களில் சிறையில் எடுக்கப்பட்டதாக வெளியான புகைப்படங்கள், ஒரு ஆண்டுக்கு முன்னால் எடுக்கப்பட்டவை. அந்தப் புகைப்படங்கள் ஒரு கைதியிடமிருந்து சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்த செல்போனில் இருந்த புகைப்படங்கள் என்றும் கூறினார்.

வழக்குரைஞர்கள் மற்றும் உறவினர்களிடம் பேச கைதிகள் நேர்காணலை மட்டுமே நம்பி உள்ளனர். அவர்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுத்தால், பெருமளவில் இந்த செல்போன் நடமாட்டங்களை தடுக்கலாம் என்கிறார், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவல்களைப் பெற்ற சிறைக் கைதிகள் உரிமை மைய இயக்குநர் புகழேந்தி.

பொது தொலைபேசி வசதி வேண்டும்

 கர்நாடக சிறைகளில் 2003-ஆம் ஆண்டு முதலாகவே கைதிகள் பயன்பாட்டுக்காக பொது தொலைபேசிகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழக சிறைகளிலும் பொது தொலைபேசிகளை நிறுவலாம் என்ற கொள்கை அளவில் தமிழக அரசு எடுத்த முடிவு இதுநாள் வரை செயல்படுத்தப்படாமலேயே உள்ளது. பொது தொலைபேசி நிறுவுவதற்காக டெலிபோன் பூத்கள் சிறைகளுக்கு வழங்கப்பட்டு, தொலைபேசி இணைப்பு கொடுக்கப்படாமல் கடந்த ஆறு மாதங்களாக அவை தூசு படிந்து கிடப்பதாக கூறுகிறார்கள் வழக்குரைஞர்கள்.

அரசு இந்த விஷயத்தில் விரைந்து முடிவு எடுத்தால் சட்ட விரோத செல்போன் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்த அது நிச்சயம் உதவும்.

 

தமிழக சிறைகளில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் பட்டியல்:

சிறைகள் 2010 - 2011 - 2012 - 2013-ஆம் ஆண்டு 30.06.2013 வரை

1. புழல் 1 11 - 57 - 80 - 21

2. புழல் 2 53 - 81 - 188 - 57

3. வேலூர் 45 - 43 - 48 - 44

4. கடலூர்   3 -  3   - 19 -  6

5. திருச்சி 31 -  43 -  53 -  46

6. சேலம் 15 - 21 -  84 - 52

7. கோவை 71 - 107 - 165 - 70

8. மதுரை 18 - 25 - 32 - 30

9. பாளையங்கோட்டை 92 - 40 - 35 - 16

10. பெண்கள் தனிச்சிறை வேலூர் 1 - 0 - 0 - 0

11.பார்ஸ்டல் பள்ளி  புதுக்கோட்டை 0 - 2 - 0 - 0

மொத்தம் 340 - 422 - 704 - 342

இந்தப் பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.