கிண்டி கிங் ஆய்வகம் உள்பட அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள்

சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் பாம்பு விஷ முறிவு மருந்து உற்பத்திப் பிரிவு உள்பட அரசு மருத்துவமனைகளுக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
கிண்டி கிங் ஆய்வகம் உள்பட அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள்

சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் பாம்பு விஷ முறிவு மருந்து உற்பத்திப் பிரிவு உள்பட அரசு மருத்துவமனைகளுக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் புதிய கட்டடங்களை அவர் திறந்தார்.

இது குறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையில் ஸ்பெக்ட்-சிடி கருவியின் சேவையை முதல்வர் துவக்கி வைத்தார். இதனால், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளை பாதிக்கும் நோய்கள், புற்றுநோயால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

கிண்டி கிங் ஆய்வகம்: சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து - ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பு விஷ முறிவு மருந்து உற்பத்திப் பிரிவு, தரக் கட்டுப்பாடு, தர உறுதிப் பிரிவு, குருதி பகுப்பாய்வுப் பிரிவு கட்டடங்கள், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் குடியிருப்பு கட்டடங்கள், திருவள்ளூர், நாகப்பட்டினம், கோவில்பட்டி, அரியலூர், கும்பகோணம், ராமநாதபுரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு கட்டப்பட்ட கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

மேலும், 10 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், 16 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டடங்கள், 17 துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், 7 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டப்பட்ட மகப்பேறு பிரிவு கட்டடங்கள் என ரூ.70.69 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்தார்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்: கோவை-செட்டிப்பாளையம், ஆனைக்கட்டி, சோமையம்பாளையம், விழுப்புரம்-ஆரம்பூண்டி, நாமக்கல்-சோளக்காடு, நீலகிரி அரவேனு, தெப்பக்காடு (முதுமலை), திண்டுக்கல்-பூம்பாறை, கரூர்-அய்யம்பாளையம், தேனி-குமணன்தொழு, வேலூர்-ஆத்தூர்குப்பம், புதுக்கோட்டை-வீரடிப்பட்டி, திருநெல்வேலி-திருவேங்கடம், திருப்பூர்-வெள்ளிரவேலி ஆகிய இடங்களில் 14 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள சி.டி.ஸ்கேன் கருவியின் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்புச் செயலாளர் ப.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com