நடா புயல்: மெரீனாவில் 4 அடி உயர கடல் அலைகள்

"நடா' புயல் காரணமாக சென்னையில் வியாழக்கிழமை கடல் சீற்றம் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
நடா புயல்: மெரீனாவில் 4 அடி உயர கடல் அலைகள்

"நடா' புயல் காரணமாக சென்னையில் வியாழக்கிழமை கடல் சீற்றம் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
நடா புயல் காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலை முதலே அண்ணாநகர், அம்பத்தூர், சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், திருவான்மியூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
இதேபோல் கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், ராசிபுரம், திருச்சி, ஜெயங்கொண்டம், லால்குடி, சமயபுரம், மதுரை, பரமக்குடி, ஒட்டன்சத்திரம், ஸ்ரீவில்லிபுத்தூர், வந்தவாசி, செங்கம், தேவக்கோட்டை, திருப்பத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கடல் சீற்றம்: இந்த நிலையில் நடா புயலால் சென்னை மெரீனாவில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் அலைகள் 4 அடி உயரத்துக்கும் மேல் எழுந்தன.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஆகியோரை கடலுக்குள் செல்ல வேண்டாம் கடலோர பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல் பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கடலோர ரோந்துப் படையினர் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.
மின்கசிவு ஏற்பட்டால் தகவல் அளிக்கலாம்
தமிழகத்தில் கனமழையின் போது மின்கசிவு ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மின்சார வாரியத்துக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புயல் மற்றும் மழையின் போது, வீட்டுக்கு வெளியே, வயல் வெளிகள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும்போது மின் கம்பம், மின் கம்பிகள் சேதமடைந்துள்ளதா என்பதைக் கவனித்துச் செல்ல வேண்டும்.
மின் கடத்திகள் அல்லது மின் கம்பிகள் அறுந்து கிடந்தாலோ, மின் மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் மின்பொறி தென்பட்டாலோ உடனடியாக அருகில் உள்ள மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மழை மற்றும் காற்றின்போது குழந்தைகள் மின் கம்பம் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது. மின் கம்பத்திலோ அல்லது அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்ட வேண்டாம்.
தொலைக்காட்சி, துணி துவைக்கும் இயந்திரம், கணினி உள்ளிட்ட மின்சாதனங்கள் நனைந்திருந்தால் அவற்றை இயக்க வேண்டாம்.
நீரில் நனைந்த மின்சார கம்பிகள் செல்லும் பாதைகளில் மின்கசிவு இருக்க வாய்ப்புள்ளதால், ஈரமான சுவர்களைத் தொட வேண்டாம். சுவரில் ஈரம் இருந்தால் உடனடியாக மின்சார இணைப்பை அணைத்துவிட்டு, மின்சாதன நிபுணரை வரவழைத்து சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com