சட்டப் பேரவைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் மனு

சட்டப்பேரவைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
சட்டப் பேரவைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் மனு

சட்டப்பேரவைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக்கர், பேரவை திமுக கொறடா அர.சக்கரபாணி, திமுக எம்.எல்.ஏ.க்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது:-
புதிதாக சட்டப்பேரவை தொடங்குகிறது என்றால் 15 நாள்களுக்குள் 12 குழுக்கள் அமைப்பது என்பது மரபு.
15-ஆவது சட்டப்பேரவை உருவாகி, 6 மாதம் ஆகிறது. ஆனால், இதுவரை எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை. இந்தக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தினோம். பேரவைத் தலைவர் ப.தனபால் இந்தக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். அவை முன்னவரும் ஓ.பன்னீர்செல்வமும் உறுதி கொடுத்தார்.
எனினும், பேரவைக் குழுக்கள் அமைக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து, திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று பேரவைத் தலைவர், அவை முன்னவரிடம் மனு கொடுத்தோம். காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் மனுக்கள் அளிக்கப்பட்டன.
ஆனாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது என அனைத்து துறைகளையும் ஆய்வு செய்வது பேரவைக் குழுக்களின் கடமையாகும். அந்த அறிக்கை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, பேரவைக் குழுக்களை அமைக்காதது என்பது தமிழக வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தோம்.
பேரவைக் குழுக்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து நிச்சயமாகப் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.
அதையும் தாண்டி நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த நிலை வராமல் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக ஸ்டாலின் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com