இல்லந்தோறும் இணையம் திட்டம்: இணைய சேவை வழங்கும் 200 பேர் ஆர்வம்

இல்லந்தோறும் இணையம் திட்டத்தைச் செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ள 200 இணையதள சேவை வழங்குநர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இல்லந்தோறும் இணையம் திட்டம்: இணைய சேவை வழங்கும் 200 பேர் ஆர்வம்

இல்லந்தோறும் இணையம் திட்டத்தைச் செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ள 200 இணையதள சேவை வழங்குநர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் இணையதளத் திட்டத்தை நடைமுறைப்படுத்த என்னென்ன அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசின் சார்பில் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது தொடர்பாக அந்தப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட உள்ளது.
அரசு கேபிள் தொலைக்காட்சி ஆப்பரேட்டர்கள் மூலம் மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் உள்பட இதர இணைய சேவைகள் குறைந்த கட்டணத்தில் அளிக்கும் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வர் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன.
இணையதள சேவை அளிப்பதற்கான உரிமத்தை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்கெனவே பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
200 விருப்ப விண்ணப்பங்கள்: இந்தத் திட்டத்தில் இணைந்து இணையதள சேவைகள் அளிக்க விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது.
சுமார் 200 பேர் வரை தமிழக அரசின் இல்லந்தோறும் இணையம் திட்டத்தில் இணைந்து இணைய சேவையை பொது மக்களுக்கு அளிக்க முன்வந்துள்ளனர்.
அரசு ஆலோசனை: இல்லந்தோறும் இணையத் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளவர்களுடன் தமிழக அரசு வரும் 7- ஆம் தேதியன்று ஆலோசனை நடத்தவுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இணைய சேவை அளிப்போருக்கு என்னென்ன கட்டமைப்பு வசதிகள் அரசின் சார்பில் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, இல்லந்தோறும் இணையம் திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு விரைவில் அனைத்து நகரங்களிலும் அந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com