60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.
60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதைகளுடன் செவ்வாய்க்கிழமை (டிச.6) மாலை 6.05 மணிக்கு சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் (வயது 68) உடல், சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மதரீதியான சில சடங்குகள் செய்யப்பட்ட நிலையில், காலை 5.45 மணியளவில் அவரது உடல் மீது அதிமுக கட்சிக் கொடி போர்த்தப்பட்டது; அவசர ஊர்தி வாகனத்தில் ராஜாஜி அரங்கத்துக்கு காலை 6.10 மணிக்கு கொண்டு வரப்பட்டு, அவரது உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது.
குடியரசுத் தலைவர், பிரதமர், ராகுல் காந்தி...: ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தில்லி, மத்தியப்பிரதேசம், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் எனப் பல்வேறு தலைவர்கள் சென்னைக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஜெயலலிதா உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
ஆறுதல் கூறி தேற்றிய பிரதமர்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த, பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 1.30 மணிக்கு ராஜாஜி அரங்கத்துக்கு வந்தார். தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஐ.என்.எஸ்., அடையாறு (கடற்கரை சாலையில் தீவுத்திடலுக்கு எதிரே) வந்திறங்கினார். பின்னர் கார் மூலமாக ராஜாஜி அரங்கை வந்தடைந்தார்.
அவருடன் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். ராஜாஜி அரங்கத்துக்கு பிற்பகல் 1.30 மணிக்கு பிரதமர் மோடி வந்தார்.
அப்போது சசிகலாவின் அருகில் சென்ற மோடி அவர் தலையில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தோள்களைத் தட்டி அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, துக்கம் தாங்க முடியாமல் ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் விட்டார்.
மலர்வளையம் வைத்து...: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, ராஜாஜி அரங்கத்தில் கூடியிருந்த பொது மக்களுக்கு தனது வணக்கத்தின் மூலம் ஆறுதல்களைத் தெரிவித்தார். அங்கு கூடியிருந்தவர்களிடம் கைகளைக் கொடுத்து ஆறுதல் கூறித் தேற்றினார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி: ராஜாஜி அரங்கத்துக்கு மாலை 4 மணியளவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வந்து அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதாவின் உடலுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், முன்னாள் பிரதமர் தேவெகவுடா உள்ளிட்ட பலரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு: ராஜாஜி சாலையில் இருந்து நல்லடக்கத்துக்காக மெரீனா கடற்கரைக்கு ராணுவ வாகனத்தின் மூலம் ஜெயலலிதாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ராஜாஜி அரங்கில் தொடங்கி அண்ணாசாலை வழியாக வாலாஜா சாலையை இறுதி ஊர்வலம் அடைந்து, பின்னர் கடற்கரை சாலைக்குச் சென்றது.
இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் மிகுந்த சோகத்துடன் பங்கேற்றனர்.
மலர் தூவி இறுதி அஞ்சலி: எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு இடதுபுறத்தில் இருந்த காலியிடத்தில் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன. ராணுவ வாகனத்தில் இருந்து இறக்கப்பட்ட உடல், சந்தனைப் பேழைக்கு மாற்றப்பட்டது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையாளர் டி.கார்த்திகேயன் முதல்வர் உடலுக்கு வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, பேரவைத் தலைவர் பி.தனபால், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், முன்னாள் ஆளுநர் ரோசய்யா, அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி, மாநில தலைவர் திருநாவுக்கரசர், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்டோர் மலர்தூவி முதல்வர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
சசிகலாவிடம் தேசியக் கொடி ஒப்படைப்பு: ஜெயலலிதாவின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை, முப்படையினர் மடித்து சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.
மத ரீதியான சடங்குகள்: இதன் பிறகு, மத ரீதியான சடங்குகளை சசிகலாவும், முதல்வரின் அண்ணன் மகன் தீபக் ஜெயக்குமாரும் மேற்கொண்டனர்.
இந்தச் சடங்குகள் முடிக்கப்பட்டு சந்தனப் பேழையின் மூடி மாலை 6.03 மணிக்கு மூடப்பட்டு, ஏற்கெனவே தரையில் தோண்டி வைக்கப்பட்டிருந்த ஆழமான குழியில் இறக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, 21 குண்டுகள் முழங்க ஜெயலலிதாவுக்கு ராணுவத்தின் தரப்பில் இறுதி மரியாதை தரப்பட்டது. முழு அரசு மரியாதைகளுடன் உடல் அடக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, அனைவரும் மண், பூ, சந்தனக் கட்டைகள் போன்றவற்றை அந்தக் குழியில் போட்டு இறுதிச் சடங்குகளை நிறைவு செய்தனர். அப்போது மெரீனா முழுவதும் நிசப்தம் ஏற்பட்டது. ஒரு வரலாற்றுச் சகாப்தம் மெரீனாவில் தன்னை முடித்துக் கொண்டது.

சந்தனப் பேழையில் புரட்சித் தலைவி ஜெயலலிதா
ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப் பேழையில், அவரது பெயர் தமிழ்-ஆங்கில எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது. மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தின் இடதுபுறப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த உடல் அடக்கத்துக்காக சந்தனப் பேழை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பேழையில் அவரது பெயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருந்தது. ""புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா'' என தமிழிலும், அது அப்படியே ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com