முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம்: அதிமுக தொண்டர்கள் 14 பேர் சாவு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் செய்தியை அறிந்த இரு பெண்கள் உள்பட அதிமுக தொண்டர்கள் 14 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் செய்தியை அறிந்த இரு பெண்கள் உள்பட அதிமுக தொண்டர்கள் 14 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ராசப்பன் (65). அதிமுக உறுப்பினர். இவர் வீட்டில் திங்கள்கிழமை பிற்பகல் முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தவுடன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார்.
மூதாட்டி சாவு: துடியலூரை அடுத்த செங்காளிபாளையம், காந்தி காலனியைச் சேர்ந்தவர் மாரிசாமி மனைவி பழனியம்மாள் (70). ஞாயிற்றுக்கிழமை இரவு ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஈரோடு: ஈரோடு, நாராயணவலசு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜு (38). அதிமுகவின் 20-ஆவது வார்டு உறுப்பினரான இவர், திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் முதல்வர் உடல்நிலை குறித்த செய்தியை அறிந்து, திடீரென அவர் மயங்கி விழுந்து இறந்தார்.
சேலம்: சேலம் அரிசிபாளையம் சின்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). இவர் 25-ஆவது கோட்ட அதிமுக முன்னாள் துணைச் செயலராகப் பொறுப்பு வகித்தவர். திங்கள்கிழமை பிற்பகல் தொலைக்காட்சியில் முதல்வரின் உடல்நிலை குறித்து பார்த்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்துள்ள குட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி (60). குட்டுப்பட்டி அதிமுக கிளைக் கழக முன்னாள் பிரதிநிதியான இவர், முதல்வர் குறித்து வெளியான தகவலை அடுத்து, திங்கள்கிழமை அதிகாலை நெஞ்சு வலியால் மரணமடைந்தார்.
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே, செய்யூரை அடுத்த முதலியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (45). அதிமுகவின் தீவிர தொண்டரான இவர், முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைக்காட்சிகளில் வெளியான செய்திக் கண்டு அதிர்ச்சி அடைந்து மாரடைப்பு ஏற்பட்டு, இறந்தார்.
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (45). தீவிர அதிமுக தொண்டரான இவர் திங்கள்கிழமை மாலை செய்தியைக் கேட்டதும் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிக் குடித்துவிட்டாராம். உடனடியாக அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ஆம் சேத்தி, சிங்கன்குத்தகை பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (80) விவசாயத் தொழிலாளி. அதிமுக உறுப்பினரான இவர், முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் திங்கள்கிழமை காலை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தருமபுரி: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கவலையுற்றதால் தருமபுரி மாரண்டஅள்ளியைச் சேர்ந்த அதிமுக தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் பெண் ஒருவர் மாரடைப்பால் திங்கள்கிழமை இறந்தார்.
கடலூர்/நெய்வேலி: திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி ஊராட்சி, நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (61). அதிமுக கிளைப் பொருளர். சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்ததார்.
இதே ஊரைச் சேர்ந்தவரும், தங்கராசுவின் நண்பருமானவர் சாமுண்டி (63). அதிமுக கிளைச் செயலர். இவரும் முதல்வரின் உடல்நிலை குறித்த செய்தியை பார்த்தபின் மிகுந்த சோகத்தில் இருந்தார். மேலும், தங்கராசு சடலத்தைப் பார்த்துவிட்டு திரும்பியவர் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டின் அருகே இறந்து கிடந்தார்.
பண்ருட்டி அருகே உள்ள சன்னியாசிப்பேட்டை காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (40). சன்னியாசிப்பேட்டை பகுதி ஜெயலலிதா பேரவை கிளைச் செயலராக இருந்தார். முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்தியை தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நீலகண்டன் உயிரிழந்தார்.
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (43), அதிமுக உறுப்பினராக இருந்தார். இவர், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் இறந்தார்.
விழுப்புரம்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இறையூரைச் சேர்ந்தவர் தங்கவேலு (75), சித்த வைத்தியரான இவர், விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் ஊராட்சி இரும்பை சாலையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் டீ குடிப்பதற்கு வந்தபோது, முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்தியைக் கேட்ட அவர், திடீரென அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com