ஜெயலலிதா நினைவிடத்தில் விடிய விடிய மக்கள் வெள்ளம்: கண்ணீர் கடலானது மெரீனா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திரண்டிருந்த கூட்டத்தில் ஒரு பகுதியினர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திரண்டிருந்த கூட்டத்தில் ஒரு பகுதியினர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனால் மெரீனா கடற்கரை கடல் அலையாக மாறியது. பெண்கள், குழந்தைகள் என பலரும் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்த்து கண்ணீர் சிந்தினர்.
போயஸ் தோட்ட இல்லத்திலும்...: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கும் ஏராளமானோர் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்...: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அதிமுகவினர் பலரும் மொட்டை போட்டு தங்களது குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்து போனதைப் போன்று துக்கத்தை வெளிப்படுத்தினர். கற்பூரம் ஏற்றியும் வழிபாடு நடத்தினர். இதனால், நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகில் செவ்வாய்க்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் செய்யப்பட்ட நேரத்தில் ஆளுநர், மத்திய அமைச்சர்கள், முக்கிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள் இருந்ததாலும், பாதுகாப்பு கருதியும் அடக்கம் நடந்த இடத்தின் அருகே பொது மக்கள் யாரும் அனுமதி அளிக்கப்படவில்லை.
நல்லடக்கம் முடிந்த பின்னர், செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியில் இருந்தே பொது மக்கள் அதிகளவு வரத் தொடங்கினர். இரவு நேரத்தில் மிகவும் அமைதியாகக் காணப்படும் கடற்கரை சாலைகள் வழக்கத்துக்கு மாறாக பரபரப்புடன் காட்சி அளித்தன. குழந்தைகள், பெண்கள் என குடும்பம் குடும்பமாக வந்து ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்த்து சோகத்தில் மூழ்கினர்.
ஆயிரக்கணக்கில் அஞ்சலி: ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது, அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், அவரது நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்க்கவும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் புதன்கிழமை காலையிலும் வந்தனர்.
அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் அணி அணியாக வந்து, தங்கள் வீட்டில் உள்ள ஒருவர் இறந்து விட்டால் எப்படி மொட்டை போடுவார்களோ அதுபோன்று நூற்றுக்கணக்கானோர் மொட்டை அடித்தனர். பொது மக்களில் பலரும் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை கற்பூரம் ஏற்றி, கோயிலில் தெய்வத்தை வழிபடுவது போன்று கண்ணீர் சிந்தி உணர்ச்சிப்பிழம்பாக நின்றனர்.
இது குறித்து அஞ்சலி செலுத்த வந்த பெண் ஒருவர் கூறுகையில், "நான் எனது கணவர், குழந்தையுடன் வந்துள்ளேன். எனக்கு முதல்வர் என்றால் அவ்வளவு பிடிக்கும். அவர்களது திட்டங்களால் பயன் பெற்றிருக்கிறேன். அடக்கம் செய்யப்பட்ட போது தொலைக்காட்சியில் மட்டுமே அதைப் பார்க்க முடிந்தது. எனவே, இப்போது வந்துள்ளேன்' என்றார்.
இதே மனநிலையில்தான் பல பெண்களும் சாரை சாரையாக வந்து கொண்டே இருந்தனர்.
அரசு ஊழியர்கள் அஞ்சலி: நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நல்லடக்க இடத்தைச் சுற்றிலும் சாலைத் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. பொது மக்களை கட்டுப்படுத்தும் பணியிலும் போலீஸ் ஈடுபட்டுள்ளனர்.
பொது மக்களைப் போன்று, அரசு ஊழியர்களும் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தலைமைச் செயலக சங்கத்தின் சார்பில் ஊழியர்கள் அனைவரும் புதன்கிழமை காலை இரங்கல் கூட்டம் நடத்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
மாலையில் தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று அங்கு அஞ்சலி செலுத்தினர்.
இதேபோன்று பிற அலுவலகங்களைச் சேர்ந்தோரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விரைவில் நினைவிடம்: எம்.ஜி.ஆருக்குக் கட்டப்பட்டது போன்றே, ஜெயலலிதாவுக்கும் நினைவிடம் அமைக்கும் பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதற்கான ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நினைவிடத்துக்கான வடிவமைப்புகள் தயார் செய்யப்பட்டு அவை ஒப்புதல் பெறப்பட்ட பிறகு கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், கடலோர மேலாண்மை ஒழுங்கு முறைச் சட்டத்தின்படி, கடற்கரையோரங்களில் மிகப்பெரிய கட்டுமானங்களை கட்டக் கூடாது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவும் உள்ளது.
எனவே, நினைவிடம் மிக எளிமையாக, அதே சமயம் அவரது நினைவைப் போற்றும் வகையில் இருக்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
சென்னை மெரீனாவில் உருவாக்கப்பட்டிருந்த மணற் சிற்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com