மூத்த பத்திரிகையாளர் சோ மறைவு

அரசியல் விமர்சகர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர், எழுத்தாளர், நடிகர், நாடகாசிரியர், வழக்குரைஞர் எனப் பன்முக ஆற்றலாளர் சோ.ராமசாமி (82) சென்னையில் புதன்கிழமை மாரடைப்பால் காலமானார்.
மூத்த பத்திரிகையாளர் சோ மறைவு

அரசியல் விமர்சகர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர், எழுத்தாளர், நடிகர், நாடகாசிரியர், வழக்குரைஞர் எனப் பன்முக ஆற்றலாளர் சோ.ராமசாமி (82) சென்னையில் புதன்கிழமை மாரடைப்பால் காலமானார்.
சோவுக்கு செளந்தரா என்ற மனைவி, ஸ்ரீராம் என்ற மகன், சிந்துஜா என்ற மகள் ஆகியோர் உள்ளனர்.
அதிகாலையில் மாரடைப்பு: நுரையீரல் அழற்சி நோய்க்காக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நவம்பர் 29-ஆம் தேதி சோ ராமசாமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச.6) மாலை சோவின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் கருவி ("வென்டிலேட்டர்') பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், புதன்கிழமை (டிச.7) அதிகாலை 4 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சோ ராமசாமி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து எம்.ஆர்.சி. நகர் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சோவின் உடல் வைக்கப்பட்டது.
ஏராளமானோர் அஞ்சலி: எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சோவின் உடலுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்பட அனைத்து துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
உயர் நீதிமன்ற வழக்குரைஞராக...சோ ராமசாமி 1934 அக்டோபர் 5-ஆம் தேதி சென்னையில் பிறந்தார். தந்தை ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். லயோலா கல்லூரியில் பியூசி பயின்றார். விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி., படிப்பையும், அதன் பின் 1953-1955-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டம் பெற்றார்.
1957 முதல் 1962 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1962-ஆம் ஆண்டு முதல் டி.டி.கே நிறுவனங்களுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.
1970-ஆம் ஆண்டு துக்ளக் தொடக்கம்: இதற்கிடையில் நாடகம், திரைப்படங்களில் நடித்தார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1970-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி துக்ளக் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார்.
மாநிலங்களவை உறுப்பினர்: பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது மாநிலங்களவை உறுப்பினராக (1999-2005) நியமிக்கப்பட்டார்.
அரசியல் தலைவர்களுடன் நட்பு: பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பல அகில இந்திய தலைவர்களுடனும், திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்பட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகவும் சோ விளங்கினார்.
சோவின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் பங்கேற்றனர்.
ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், சசிகலா:

முன்னதாக எம்.ஆர்.சி.நகரில் வைக்கப்பட்டிருந்த சோவின் உடலுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஸ்டாலின், விஜயகாந்த்...சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, குமரி அனந்தன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.செழியன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி: நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, கார்த்திக், அஜித்குமார், பார்த்திபன், நாசர், நெப்போலியன், பாண்டியராஜன், விஜயகுமார், விவேக், கருணாஸ், பொன்வண்ணன், மனோபாலா, செந்தில், இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், டி.ராஜேந்தர், சுந்தரராஜன், தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், ஏ.எல்.அழகப்பன், நடிகைகள் கௌதமி, கோவை சரளா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, ஐராவதம் மகாதேவன், தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், பத்திரிகையாளர் என். ராம் உள்பட பல்வேறு பத்திரிகையாளர்களும், நாடக நடிகர்களும், துக்ளக் பத்திரிகையின் வாசகர்களும் சோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
"தவறுகளை விமர்சிக்க அஞ்சாதவர்'


மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான சோ ராமசாமியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமிக்கு பிரணாப் முகர்ஜி அனுப்பியிருக்கும் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சிறந்த நாடக மற்றும் திரைப்பட நடிகரும், பத்திரிகையாளர் மற்றும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான உங்களது கணவர் சோ ராமசாமி காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு நான் கவலையடைந்தேன். தனது அறிவாற்றல் மற்றும் நையாண்டி விமர்சனத்துக்கு சோ பெயர் பெற்றவர். தவறை விமர்சிப்பதற்கு சிறிதும் அஞ்சாதவர். தனது வாழ்நாள் முழுவதிலும் மிகவும் உயர்ந்த தொழில்நேர்த்தியை கடைப்பிடித்தவர் ராமசாமி. இதுவே அவருக்கு பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தந்தது. அதில் பத்திரிகைத் துறையில் சிறப்பான பங்களிப்பு அளித்ததற்கு அளிக்கப்பட்ட ஜி.டி. கோயங்கா விருதும் அடங்கும்.
இளம்தலைமுறையினருக்கு ராமசாமி தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் சக்தியாக இருப்பார். அவரது மறைவின் மூலம், சிறந்த அறிவாளி மற்றும் மக்களால் மதிக்கப்பட்ட நபரை நாடு இழந்து விட்டது என்று பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

"சிறந்த தேசியவாதி நெருங்கிய நண்பர்'


எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட சுட்டுரை பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: பன்முகத்திறமை கொண்டவரும், மிக உயர்ந்த அறிவாளியும், சிறந்த தேசியவாதியுமான சோ மறைந்தது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. அவரது குடும்பத்தினருக்கும், துக்ளக் இதழின் எண்ணற்ற வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன். எந்த விஷயத்தையும் நுணுக்கமாகப் பார்ப்பதுடன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவரும், புத்திசாலியுமான சோ, அனைவராலும் மதிக்கப்பட்டவர்.
அச்சமின்றி எதிர்த்து குரல் கொடுக்கக் கூடியவர், மாமனிதர், நல்ல எழுத்தாளர், இவற்றைத் தாண்டி அவர் எனக்கு நெருக்கமான நல்ல நண்பர் என்று அந்தப் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.
விடியோ பதிவு: இதனிடையே, குஜராத் முதல்வராக தாம் இருந்தபோது தமிழகத்தில் சோ ராமசாமியால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் தனக்கு அதிர்ச்சி கலந்த புகழாரம் சூட்டியதை பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் நினைவுகூர்ந்தார்.
இதுதொடர்பான விடியோ பதிவையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.
3-ஆவது முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்ற மோடியை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி "மரண வியாபாரி' என்று விமர்சித்தார். இதற்கு, தமிழகத்தில் நிகழ்ந்த "துக்ளக்' வாசகர் கருத்தரங்க விழாவில் எழுத்தாளர் சோ ராமசாமி உரிய பதிலடி கொடுத்தார். அந்த விழாவில் பங்கேற்ற மோடியை உரையாற்றுவதற்காக சோ அழைத்தபோது, "மரண வியாபாரியான, மோடியை பேச அழைக்கிறேன்' என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார்.
இதைத் தொடர்ந்து, சோ பேசுகையில், "ஆமாம் மோடி மரண வியாபாரிதான், எதற்கு? பயங்கரவாதம், ஊழல், உறவினர்களுக்கு சலுகை காட்டுதல், நிர்வாகத் திறமையின்மை, அதிகாரிகள் அலட்சியம், ஏழ்மை மற்றும் அறியாமை ஆகியவற்றுக்கு மோடி மரண வியாபாரியாவார்' என்று சோ, தம் ஆட்சித் திறனை புகழ்ந்ததை சுட்டுரையில் மோடி சுட்டிக் காட்டினார்.


மறைந்த பத்திரிகையாளர் சோவிற்கு இறுதி மரியாதை செலுத்தும்
ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

இறுதி மரியாதை செலுத்த வருகை தந்த
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இறுதி மரியாதை செலுத்தும்
ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com