போயஸ் தோட்டத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்ட வீட்டுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் வியாழக்கிழமை சென்றனர். அங்கு அதிமுகவின் மூத்த தலைவர்களும்,

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்ட வீட்டுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் வியாழக்கிழமை சென்றனர். அங்கு அதிமுகவின் மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர். மூத்த எம்.எல்.ஏ.க்களும் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
முதல்வர் ஜெயலலிதா காலமானதையடுத்து, திங்கள்கிழமை (டிச.5) நள்ளிரவு 1 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்றது.
முதல்வருடன் 32 பேர் பொறுப்பேற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச.6) நடைபெற்ற முன்னாள் முதல்வரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று அமைச்சர்கள் யாரும் தலைமைச் செயலகம் வரவில்லை. வியாழக்கிழமையும் இதே நிலை தொடர்ந்ததால் தலைமைச் செயலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. எப்போதும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களால் நிரம்பி வழியும் தலைமைச் செயலகம் கடந்த ஒரு வாரமாக கட்சியினர் நடமாட்டம் இல்லாமல் உள்ளது.
இன்று பொறுப்பேற்பர்: இந்த நிலையில், புதன், வியாழன் ஆகிய இரண்டு நாள்களும் உகந்த நாள்கள் இல்லை என்பதால் முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை காலை தலைமைச் செயலகம் வந்து தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஜெயலலிதா வகித்த பொறுப்புகளை மட்டுமே கவனித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், இனி முதல்வர் பொறுப்பை ஏற்று பணிகளைத் தொடங்க இருக்கிறார்.
இந்த நிலையில், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வியாழக்கிழமை சென்றனர். அங்கு அவர்கள் அனைவரும் கூடி ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து சிறப்பாக ஆட்சி நடத்திட அவர்கள் அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com