வங்கக் கடலில் "வர்தா' புயல்: தமிழகத்துக்கு பாதிப்பில்லை

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது. இதற்கு "வர்தா' என்று பெயரிடப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் "வர்தா' புயல்: தமிழகத்துக்கு பாதிப்பில்லை

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது. இதற்கு "வர்தா' என்று பெயரிடப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் "வர்தா' புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நடா' புயல் நவம்பர் 30-ஆம் தேதி உருவாகி, வலுவிழந்து டிசம்பர் 2-ஆம் தேதி காரைக்கால் அருகே கரையைக் கடந்தது. இருப்பினும், இந்தப் புயலால் தமிழகத்துக்கு போதிய மழை கிடைக்கவில்லை. இதனையடுத்து, தென் மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, அதனையடுத்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நிலையும், அது நகர்ந்து செல்லும் திசையும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மேலும் வலுப்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வலுபெற்று புயலாக மாறியுள்ளது. "வர்தா' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது விசாகப்பட்டியத்துக்கு தென்கிழக்கே 1,060 கி.மீ. தூரத்தில் தற்போது நிலை கொண்டுள்ளது. அது மேலும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்பகுதிக்கு நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. "வர்தா' புயலானது டிசம்பர் 12-ஆம் தேதி முற்பகல் நெல்லூர் - காக்கிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலின் காரணமாக தமிழகத்துக்கு தற்போது பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் புயலின் வேகம், நகர்வைப் பொருத்து தமிழகத்தில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் குறித்து அறிவிக்கப்படும். தற்போது தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பிடும் அளவுக்கு மழை இருக்காது.
மேலடுக்கு சுழற்சி வலுவிழந்தது: இந்த நிலையில், தென் தமிழக கடலோரப் பகுதியின் மேலடுக்கு சுழற்சி உருவாகியிருந்தது. அந்த மேலடுக்கு சுழற்சியானது வலுவிழந்துவிட்டது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக மீனவர்கள் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் ஆந்திர கடற்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, எங்கும் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com