சுவாசத்தைச் சீராக்க கருணாநிதிக்கு சிகிச்சை

சுவாசப் பிரச்னையைச் சீர்படுத்துவதற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு வெள்ளிக்கிழமை (டிச.16) டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுவாசத்தைச் சீராக்க கருணாநிதிக்கு சிகிச்சை

சுவாசப் பிரச்னையைச் சீர்படுத்துவதற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு வெள்ளிக்கிழமை (டிச.16) டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுவாசிப்பதில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு கருணாநிதி (92) அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் உள்ள சிறப்புப் பிரிவில் அவருக்கு தொண்டை - நுரையீரலில் ஏற்பட்ட நோய்த் தொற்றுக்கான சிகிச்சையை மருத்துவக் குழுவினர் அவருக்கு அளித்து வருகின்றனர்.
கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் எஸ்.அரவிந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு, காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை (டிச.15) இரவு 11 மணி அளவில் கருணாநிதி மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
நேரடியாக மூச்சுக் குழல் மூலம்...சுவாசத்தைச் சீர்படுத்துவதற்காக, அதாவது பிராண வாயுவை ("ஆக்ஸிஜன்') நேரடியாக மூச்சுக் குழலில் செலுத்த வசதியாக கருணாநிதியின் தொண்டைப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்து (டிரக்யாஸ்டமி) குழாய் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்படுவதால் தற்போது அவர் நலமாக உள்ளார். மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவினர் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று டாக்டர் எஸ்.அரவிந்தன் கூறியுள்ளார்.
இலகுவாக சுவாசிப்பு: கருணாநிதியின் உடல் நிலையில் வெள்ளிக்கிழமை (டிச.16) மாலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் தற்போது எளிதாக சுவாசிப்பதாக செய்தியாளர்களிடம் கனிமொழி கூறினார்.
தலைவர்கள் நலம் விசாரிப்பு: கருணாநிதியை மனைவி ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி ஆகியோர் அருகில் இருந்து கவனித்துக் கொள்கின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மகன் மு.க.தமிழரசு ஆகியோரும் உடன் உள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கருணாநிதியின் உறவினர்களிடம் நலம் விசாரித்தனர். திமுகவின் முக்கியப் பிரமுகர்களும் நலம் விசாரித்தனர்.

"டிரக்யாஸ்டமி' சிகிச்சை என்றால் என்ன?


"டிரக்யாஸ்டமி' சிகிச்சையின்போது, கழுத்துப் பகுதியில் குரல்வளைக்குக் கீழ் மூச்சுக் குழாயில் ("டிரக்யா') சிறிய துவாரம் இடப்பட்டு, அதன் வழியாக சிறிய குழாய் செருகப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் நுரையீரலுக்கு பிராண வாயு ("ஆக்ஸிஜன்') நேரடியாக, எளிதாகச் செல்லும். வாய், மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகளைப் பயன்படுத்தாமல், குழாய் மூலம் சுவாசிக்கும் வகையில் இந்தச் சிகிச்சைஅளிக்கப்படுகிறது.
மேலும் மூச்சுக் குழாயில் செருகப்பட்ட குழாயானது, அதன் இடத்தில் இருந்து நகராமல் இருப்பதற்காக கழுத்தைச் சுற்றி ஒரு பட்டையும் அணிவிக்கப்படும். இது குழாய் நகராமல் இருப்பதற்கும், சிகிச்சையின்போது தோலில் ஏற்பட்ட காயத்தைக் குணமாக்கவும் உதவும். சிலருக்கு தாற்காலிகமாகவும், சிலருக்கு நிரந்தரமாகவும் டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்படும். டிரக்யாஸ்டமி சிகிச்சைக்குப் பிறகு சிலருக்கு செயற்கை சுவாசக் கருவியின் ("வென்டிலேட்டர்') உதவி தேவைப்படலாம்.
பிற பிரச்னைகளுக்கும்...மூச்சுத் திணறல், மூச்சுவிடுவதில் பிரச்னை உள்ளவர்களுக்கு பொதுவாக டிரக்யாஸ்டமி சிகிச்சை செய்யப்படும். இது தவிர கழுத்தில் புற்றுநோய், நாள்பட்ட நுரையீல் பிரச்னை, முகத்தில் தீக்காயம், நோய்த்தொற்று, நெஞ்சு சுவரில் நோய்த்தொற்று, மூச்சுக் குழாயில் பிறவிக் குறைபாடு உள்ளிட்டவற்றுக்கும் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com