கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு
By DIN | Published on : 27th December 2016 12:49 PM | அ+அ அ- |

கொடைக்கானல் ஏரிப் பகுதியிலுள்ள புற்களில் உறைந்து காணப்பட்ட பனி.
கொடைக்கானலில் உறை பனிநிலவுகிறது. கொடைக்கானலில் பொதுவாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் பனிக் காலமாகும். இந்த மாதங்களில் பனிப்பொழிவு ஏற்படும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை பெய்யாத நிலையில், வழக்கத்திற்கு மாறாக அதிகப் பனிப்பொழிவு நிலவுகிறது. மாலை 4 மணிக்கு பனியின் தாக்கம் ஏற்பட்டு மறுநாள் காலை 9 மணி வரையிலும் நீடிக்கிறது. இதனால், வழக்கமான பணிகளில் பொதுமக்கள் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பகல் நேரங்களிலும் சுற்றுலா இடங்களான ஏரிச்சாலை, பசுமைப் பள்ளத்தாக்கு,பில்லர்ராக், கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் தீ மூட்டி வியாபாரிகள் குளிர் காய்ந்து வருகின்றனர்.
இந்தப் பனியால் புற்கள் கருகி காணப்படுகின்றன. இலைகளிலும், வாகனங்களின் மேற்கூரைகளிலும் உறை பனி காணப்படுகிறது.
வழக்கமாக 12 டிகிரி முதல் 16 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். பகல் நேரங்களில் 22 டிகிரி வரை வெப்பம் நிலவும். தற்போது அதிகபட்சம் 16 முதல் 18டிகிரி வரையே வெப்பநிலை நிலவுகிறது. இரவு நேரங்களில் 8 டிகிரி செல்சியஸில் குளிர் நிலவுகிறது.