கோயில் விழாக்களில் ஆபாச நடனம் நடத்த எந்த உரிமையும் கிடையாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி என்ற போர்வையில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விழா ஏற்பாட்டாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி என்ற போர்வையில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விழா ஏற்பாட்டாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்குமாறு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு அளித்தனர்.
இதற்கு காவல்துறை அனுமதி வழங்காததால், நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும்படி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், நாமக்கல் மாவட்டத்தில் கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி தொடர்ச்சியாக வழக்குகள் தொடரப்படுவதைக் கவனித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை நேரில் ஆஜராகுமாறும், இது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது துணை காவல் கண்காணிப்பாளர், விசாரணை அறிக்கையையும், விடியோ பதிவையும் தாக்கல் செய்தார். அந்த விடியோவில், ஆடல், பாடல் என்ற பெயரில் பெண்கள் ஆபாச நடனம் ஆடுவதும், இளைஞர்கள் குடிபோதையில் கும்மாளமிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. சேலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு திரைப்பட மேடை நடன நடிகர்கள் நலச் சங்கம், இதுபோன்ற ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: கோயில்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கும்படி, ஏற்கெனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். இதற்காக ஆழ்ந்த வேதனை, வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்.
சட்டம், ஒழங்கு பிரச்னை தொடர்பாக முடிவெடுக்கும் காவல் துறையினரின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது. இது பற்றி அதிகாரிகள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், கோயில் விழாக்கள் நடத்துவதாகக் கூறி பொது இடத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த விழா ஏற்பாட்டாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை.
எனவே, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com