காவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை டெல்டா விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை டெல்டா விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்டச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்ததாவது:
இனிவரும் காலங்களில் காவிரி மேலாண்மை வாரியம் சரியாகச் செயல்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் கிடைப்பதற்கான உத்தரவாதம் இருப்பதாக நம்புகிறோம்.
இதற்காக சட்ட ரீதியான அனைத்து முயற்சியும் மேற்கொண்ட தமிழக அரசுக்குக் காவிரி டெல்டா விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். காவிரி நதி நீர் பிரச்னையில் 45 ஆண்டு காலத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவாகக் கருதுகிறோம்.
பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேச மாநிலங்களில் பக்ராநங்கல் நதி நீர் பிரச்னைக்கு மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய 3 மாநிலங்களுக்கான கிருஷ்ணா நதிக்கு மேலாண்மை வாரியமும், குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு இடையே நர்மதா நதி நீர் பிரச்னைக்கு மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதுபோலவே காவிரிக்கும் முழுமையான அதிகாரம் பெற்ற மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் சாமி. நடராஜன் தெரிவித்ததாவது:
காவிரி வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை வரவேற்கிறோம். இது போதுமானதல்ல என்றாலும், இதையாவது ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றார்.
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஆறுபாதி ப. கல்யாணம்:
காவிரி மேலாண்மை வாரியம் 3 நாள்களில் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மிக உறுதியாக உத்தரவு பிறப்பித்துள்ளதை வரவேற்கிறோம். இந்தக் காவிரி மேலாண்மை வாரியம் போதிய அதிகாரமுள்ள, சுதந்திரமான அமைப்பாக அமைக்கப்பட வேண்டும் என காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாக 20 பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாரியத்துக்கு முழுமையான அதிகாரம் இல்லாவிட்டால், கர்நாடகம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீர் முழுவதும் கர்நாடகத்துக்கே என அநீதியாக செயல்படும் போக்கு மாறாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com