விதிமீறிய விளம்பரப் பலகைகளை அகற்ற 2 மாதங்கள் கெடு

அரசு கட்டடங்கள், பொது இடங்களில் அரசியல் கட்சிகள் வைக்கும் விளம்பரப் பலகைகளை அகற்றவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்

அரசு கட்டடங்கள், பொது இடங்களில் அரசியல் கட்சிகள் வைக்கும் விளம்பரப் பலகைகளை அகற்றவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது இடங்களில் வைக்கப்படும் விளம்பரப் பலகையை அகற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், அவற்றை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதேபோன்று, அரசின் பொதுச் சொத்துகள், இயற்கை வளங்களின் மீதும் விளம்பரங்கள் செய்வதால் இயற்கை அழகு சிதைக்கப்படுவதையும் தடுப்பதற்கு உத்தரவிடுமாறு உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஒருவரும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த இரண்டு பொது நல வழக்குகளையும் ஒன்றாக இணைத்து தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு விசாரிக்கிறது.
இந்த வழக்கு அதே அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை தனிச் செயலர் ஜெயா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
"ஜூன் முதல் ஆகஸ்ட் வரை விதிகளை மீறி விளம்பரங்கள் செய்ததாக 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இயற்கை வளங்கள், பொது இடங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்தால் அதை அழிப்பதற்கு ஆகும் செலவை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-
அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியினர் வைத்த விளம்பரங்களை அகற்றும் போது அதற்கான செலவுகளை அந்த கட்சியிடம் இருந்து வசூலிப்பது போன்றே பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் விளம்பரங்களை அளிக்கும் போதும் அவர்களிடம் இருந்து அதற்கான செலவை வசூலிக்க வேண்டும்.
மேலும் மதுரை, நீலகிரி மாவட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன் பின்னரும் விதிமுறை மீறி விளம்பரங்கள் இருப்பதுதெரியவந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கப்படும் என்றனர்.இதையடுத்து, வழக்கை டிசம்பர் 9-க்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com