அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை; கடையடைப்பு - சாலை மறியல்

திருத்தணியில் காரில் சென்ற அதிமுக கவுன்சிலர் மீது மிளகாய் பொடி தூவி மர்ம கும்பல் கத்தியால் வெட்டிக் கொலை செய்தது. பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் நகரில் பதற்றம் நிலவியது. கடைகள் அடைக்கப்பட்டன.
அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை; கடையடைப்பு - சாலை மறியல்

திருத்தணியில் காரில் சென்ற அதிமுக கவுன்சிலர் மீது மிளகாய் பொடி தூவி மர்ம கும்பல் கத்தியால் வெட்டிக் கொலை செய்தது. பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் நகரில் பதற்றம் நிலவியது. கடைகள் அடைக்கப்பட்டன. அரக்கோணம் எம்.பி. தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணியைச் சேர்ந்தவர் கோ.ஆறுமுகம் (43) (படம்). அதிமுக பிரமுகரான இவர், திருத்தணி நகர்மன்ற 13-ஆவது வார்டு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன், பேருந்து நிலையம் அருகில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆறுமுகத்தை கொலை செய்ய வந்த மர்ம கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இந்திரா நகர் பகுதியை நோக்கி காரில் சென்ற ஆறுமுகத்தை 4 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தியது.
பின்னர், அவர் மீது மிளகாய் பொடியை தூவி சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல், காரை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
அப்போது, அவ்வழியாக வந்த பொதுமக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
எனினும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ஏராளமான அதிமுகவினர் மருத்துவமனை முன் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, திருத்தணி பேருந்து நிலையத்தில் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன. நகரில் பதற்றம் நிலவியதால், முக்கியப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், ஆறுமுகத்தை கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்யக் கோரி அரக்கோணம் எம்.பி. கோ.அரி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து, அவர்களை கலைந்து செல்லுமாறு திருவள்ளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் எச்சரித்தார். எனினும், அவர்கள் மறியலைக் கைவிடவில்லை.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பளார் சாம்சன் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள், அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com