சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா?

சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்குச் சென்று வரும் சரக்குப் பெட்டக லாரிகளின் ஓட்டுநர்களில்
சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா?

சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்குச் சென்று வரும் சரக்குப் பெட்டக லாரிகளின் ஓட்டுநர்களில் சுமார் 40 சதவீதம் பேர் மது போதையில் இயக்குவதாக தனியார் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக லாரிகள் உள்ளன. ஆனால், ஓட்டுநர்கள் தட்டுப்பாட்டால் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதனிடையில், இயக்கப்படும் சரக்குப் பெட்டக லாரிகளால், திருவொற்றியூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பிரச்னை குறித்து காட்டுப்பள்ளி தனியார் துறைமுக முக்கிய நிர்வாகி கூறியதாவது:

தனியார் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு கப்பல்கள் வந்து செல்வது அதிகரித்துள்ளதால், சரக்குப் பெட்டக லாரிகள் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இந்த லாரிகளை ஓட்டுநர்கள் மது போதையில் இயக்குவதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினோம். அப்போது, ஓட்டுநர்களில் சுமார் 40 சதவீதம் பேர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இனி மது போதையில் வந்தால் லாரிகள் உள்ளே அனுமதிக்கமாட்டோம் என அவர்களை எச்சரித்தோம்.

துறைமுகத்தில் கனரக கிரேன்கள் அங்குமிங்கும் நகர்ந்து செல்லும் நிலையில், ஓட்டுநர்கள் மது போதையில் உள்ளே செல்வதைத் தடுப்பதால் பெரும் விபத்துகளைத் தவிர்க்க இயலும் என்றார் அவர்.

டிரைலர் உரிமையாளர் சங்கத்தின் செயலர் எஸ்.ஆர்.ராஜா கூறியதாவது:
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே வணிக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டுப்பாடு விதித்தது. இதனால், ஓட்டுநர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதோடு, படித்தவர்கள் யாரும் லாரி உதவியாளர் (கிளீனர்) வேலைக்கும் வருவதில்லை.
பயிற்சி பெற்ற ஓட்டுநர்களே சரக்குப் பெட்டக லாரிகளை இயக்க முடியும். ஆனால், பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக, சாதாரண லாரி ஓட்டுநர்களே சரக்குப் பெட்டக லாரிகளையும் இயக்குகின்றனர்.

எனவே, பயிற்சி பெற்ற சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநர்களை உருவாக்கித் தர வேண்டியது அரசின் கடமையாகும் என்றார் அவர்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியதாவது:

தமிழகத்தில் சுமார் 81 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், சுமார் 1,400 பணியிடங்கள் காலியாக உள்ளன. உயர் அதிகாரிகள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், தினமும் அதிகரித்து வரும் வாகனப் பதிவுகள், தகுதிச் சான்றுகளை அளிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் பற்றாக்குறையால், தகுதிச் சான்று பெற கொண்டு வரப்படும் வாகனங்கள் அனைத்தையும் வரிசையாக நிற்கவைத்து ஆய்வை முடித்துக் கொள்கின்றனர்.

சென்னை மாநகரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தகுதிச் சான்று, வாகனக் காப்பீடு இல்லாமல் ஓடுகின்றன. மேலும், முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. பொதுமக்களும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை. எனவே, ஓட்டுநர்களை மட்டுமே விபத்துகளுக்குக் காரணமாக்க முடியாது.

இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க போக்குவரத்து, காவல் துறை, மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலைத் துறை, லாரி உரிமையாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

சென்னை துறைமுக சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநர், கிளீனர் அண்ணா தொழிற்சங்கத் தலைவர் ஆசைத்தம்பி கூறியதாவது:

சரக்குப் பெட்டக லாரிகளை ஓட்டுவது என்பது எளிதானதல்ல. சென்னை துறைமுகத்தில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் இருந்து வருவதே ஓட்டுநர்கள் தட்டுப்பாட்டுக்குக் காரணம்.

மாதவரம், மணலி, மீஞ்சூர் பகுதிகளிலிருந்து சென்னை துறைமுகம் சுமார் 30 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. முன்பு இந்தத் தொலைவை சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இதே தொலைவைக் கடக்க குறைந்தபட்சம் 24 மணி நேரம் முதல் மூன்று நாள்கள் வரைகூட ஆகிறது.

இவ்வாறு வரிசையில் செல்லும் போது வாகனங்களை விட்டுவிட்டுச் செல்ல இயலாது. போதிய தூக்கம் இல்லாமல் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதால், சில நேரங்களில் மது அருந்தத் தொடங்கும் ஓட்டுநர்கள் படிப்படியாக அதற்கு அடிமையாகிவிடுகின்றனர்.

ஓட்டுநர்கள் மது குடிப்பதை நியாயப்படுத்தவில்லை. அதேநேரத்தில், போதிய தொழில் சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டியது யாருடைய பொறுப்பு என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கனரக வாகன ஓட்டுநர் தொழிலுக்கு சமூக அங்கீகாரம் வழங்க வேண்டும். மேலும், தேவையான அளவுக்கு இத்தகைய ஓட்டுநர்களை உருவாக்கி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பணியில் ஈடுபடுத்த வேண்டும். தண்டனைகள், அபராதத்தால் மட்டும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண இயலாது என்றார் ஆசைத்தம்பி.





 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com