தமிழக அரசு இணையதளப் பக்கங்கள் திடீர் முடக்கம்: பாகிஸ்தான் சதி காரணமா?

தமிழக அரசு இணையதளத்தின் முக்கியப் பக்கங்கள் புதன்கிழமை (அக். 19) திடீரென முடக்கப்பட்டன.
தமிழக அரசு இணையதளப் பக்கங்கள் திடீர் முடக்கம்: பாகிஸ்தான் சதி காரணமா?

தமிழக அரசு இணையதளத்தின் முக்கியப் பக்கங்கள் புதன்கிழமை (அக். 19) திடீரென முடக்கப்பட்டன. இந்தப் பக்கங்கள் முடக்கப்பட்டு, அவற்றில் PAK CYBER SKULLZ என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளதால், இது பாகிஸ்தானின் சதி வேலையாக இருக்கலாம் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) பல்வேறு முக்கிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, கடந்த கால நிதிநிலை அறிக்கைகள், அரசு உத்தரவுகள், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் எனப் பல முக்கியக் குறிப்புகளும், தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

 இந்த விவரங்களைத் தமிழகம் முழுவதும் உள்ள அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக, நிதிநிலை அறிக்கை, சில ஆண்டுகளுக்கு முந்தைய நிதிநிலை அறிக்கை ஆகியவற்றை மாநிலத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் தங்களது பயன்பாட்டுக்காக எடுத்துக் கொள்வர்.

அதிர்ச்சித் தகவல்: அரசு இணையதளத்தை அவ்வப்போது பயன்படுத்தும் அதிகாரிகளும், அலுவலர்களும் புதன்கிழமை காலை திடீரென அதிர்ச்சிக்கு ஆளாகினர். பல முக்கியத் தகவல்கள் அடங்கிய பக்கங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு இருந்ததே இந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

 இதுகுறித்து அரசுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

 கடந்த கால நிதிநிலை அறிக்கை தொடர்பான விவரங்களைப் பார்வையிட தமிழக அரசின் இணையதளத்துக்குள் (http:cms.tn.gov.insitesdefaultfilesdocumentsrevisedbudgetspeeche201617.pdf) சென்ற போது எந்தப் பக்கத்தையும் பார்வையிட முடியவில்லை. அந்தப் பக்கங்கள் அனைத்தும் பச்சை நிறத்தில் காட்சி அளித்தன. மேலும், PAK CYBER SKULLZ என்ற சொற்கள் இடம் பெற்றிருந்தன.

 மேலும், பல முக்கியத் தகவல்களைப் பார்வையிட முடியாமல் இடையூறு ஏற்பட்டது. இது எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இந்தத் திடீர் இடர்பாட்டால் தமிழக அரசு சார்ந்த பிரதான தகவல்களைப் பார்க்க முடியாமல் போனது என்றனர் அவர்கள்.

 பதிவேற்றம் இல்லை: தமிழக அரசு இணையதளத்தின் பல முக்கியப் பக்கங்கள் முடக்கப்பட்டதால், மாநில அரசின் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் குறித்த புகைப்படங்கள், பல அமைச்சர்களின் கலந்தாய்வுக் கூட்டங்கள் தொடர்பான செய்திகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்படவில்லை. பதிவேற்றம் செய்வதிலும் பிரச்னைகள் ஏற்பட்டதாக தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 தமிழக அரசின் இணையதளப் பக்கங்களில் "பாகிஸ்தான் சைபர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இதை முடக்கினரா என்பது குறித்து அரசுத் துறை வட்டாரங்கள் ஆய்வு செய்து வருகின்றன.

 இணையதளத்தின் முக்கியப் பகுதிகள் திடீரென முடக்கப்பட்டிருப்பது அரசுத் துறை வட்டாரங்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com