தமிழக ரயில்வேயில் 598 திருட்டு வழக்குகள்

தமிழகத்தில் கடந்த ஆண்டு (2015) மட்டும் ரயில்வேயில் 598 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக
தமிழக ரயில்வேயில் 598 திருட்டு வழக்குகள்

தமிழகத்தில் கடந்த ஆண்டு (2015) மட்டும் ரயில்வேயில் 598 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 மேலும், இந்தக் குற்றங்கள் 2014 -ஆம் ஆண்டு பதிவானதைவிட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 -ஆம் ஆண்டு தமிழக ரயில்வேயில் 454 திருட்டு வழக்குகள் பதிவாகின.

 தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் ஒட்டுமொத்தமாக 1,098 ரயில்வே குற்றங்கள் பதிவாகின. இந்தக் குற்றங்கள், 2014 -ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

 2014-ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 866 ரயில்வே குற்றங்கள் பதிவாகின.

 ரயில் நிலையங்கள், ரயில்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுப்பதற்கு ரயில்வே பாதுகாப்புப் படையும், ரயில்வே போலீஸாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினாலும், தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 இந்திய அளவில் 39,239 ரயில்வே குற்றங்கள் நடைபெற்றுள்ளன. முதலிடத்தில் மகாராஷ்டிர மாநிலமும், இரண்டாம் இடத்தில் உத்தரப்பிரதேசமும், மூன்றாம் இடத்தில் மத்தியப்பிரதேசமும் உள்ளன.

 அதிகரிக்கும் குற்றங்கள்: தமிழகத்தில் ரயில் பயணங்களின் போது நிகழும் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2012-இல் 774 ஆக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை, 2013-இல் 822, 2014-இல் 866 என அதிகரித்தது.
 2010- 2012 வரை குற்றங்கள் குறைந்து வந்த நிலையில், இப்போது குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. புள்ளிவிவரங்கள் காட்டுவது பதிவான வழக்குகளை மட்டும்தான். புகார் அளிக்காத பயணிகள் பலர் இருக்கின்றனர்.

 குற்றங்கள் நிகழக் காரணம்: நடுவழியில் ரயில்கள் நிற்பது, பாதுகாப்பு இல்லாத இருள் சூழ்ந்த நடைமேடைப் பகுதிகள் என திருட்டு, கொள்ளைச் சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, ரயில்களில் பெண் பயணிகளிடம் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. நடுவழியில் ரயில் நிற்கும் போது கொள்ளையர்கள் எளிதாகத் தங்களது திட்டத்தை நிறைவேற்றித் தப்பிவிடுகின்றனர்.

 மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. ரயில்களில் போதைப் பொருள், ரேஷன் பொருள்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களும் நடைபெறுகின்றன.

 முக்கிய ரயில்களில் பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில் பாதுகாப்புக்காக "சக்தி படை' ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும், இது குற்றங்களைத் தடுக்கப் போதுமானதாக இல்லை.

 ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினரும், ரயில்வே போலீஸாரும் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், குற்றங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

 ரயில்களில் அனைத்துப் பெட்டிகளிலும் காவலர்களை நியமிப்பது என்பது இயலாத விஷயம். நடுவழியில் ரயில்கள் நிற்கும் போது பாதுகாப்பில் தீவிரக் கவனம் செலுத்துவதை முக்கியமாகக் கருதுகிறோம்.

 இரவு நேரங்களில் ரயில் பெட்டிகளின் கதவுகள் மூடப்படுகின்றன. முன்பதிவுப் பெட்டிகளில் உரிய பயணச் சீட்டு இல்லாதவர்கள் நுழைவதை அனுப்பதிப்பதில்லை. இரவு நேரங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீவிரப் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.

 மேலும், ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸில் காலியாக உள்ள பணியிடங்களையும் உடனடியாக நிரப்பினால், குற்றங்களைத் தடுக்க வசதியாக இருக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com