பதிவு செய்யப்படாத கரும்புகளையும் ஆலைகள் அரைவைக்கு எடுக்கலாம்: தமிழக அரசு உத்தரவு

பதிவு செய்யப்படாத கரும்புகளையும் அரைவைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத கரும்புகளையும் ஆலைகள் அரைவைக்கு எடுக்கலாம்: தமிழக அரசு உத்தரவு

பதிவு செய்யப்படாத கரும்புகளையும் அரைவைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 இதுகுறித்து சர்க்கரைத் துறை ஆணையர் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தனியார் சர்க்கரை ஆலைகள் ஆகியன தங்களது ஆலைகளில் 100 சதவீதம் கரும்பு கொள்முதலை எட்டும் அளவுக்கு தங்களது பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்படாத கரும்புகளையும் கொள்முதல் செய்து கொள்ளலாம். இதற்கான அங்கீகாரம் சம்பந்தப்பட்ட ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது.

 சில கூட்டுறவு, பொதுத் துறை, தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு தங்கள் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அளிக்கக்கூடிய பதிவு செய்யப்படாத கரும்புகள் அரைவைக்கு தேவையில்லாமல் இருக்கலாம். ஆனாலும், அந்த ஆலைகளிடம் விவசாயிகள் விண்ணப்பிக்கும்போது பதிவு செய்யப்படாத கரும்பு தங்களுக்கு தேவையில்லை எனவும், அதனை தேவைப்படும் பிற சர்க்கரை ஆலைகளுக்கு அளிப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை எனவும் சம்பந்தப்பட்ட ஆலைகள் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

 இதனால், குறிப்பிட்ட எல்லைக்குள்பட்ட சர்க்கரை ஆலைக்கு மட்டுமே பதிவு செய்யப்படாத கரும்பினை அளிக்காமல், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள ஆலைகளுக்கும் அதனை விவசாயிகள் அளிக்க முடியும். இத்தகைய சான்றிதழை விவசாயிகள் விண்ணப்பித்த 14 நாள்களுக்குள் அளித்திட வேண்டும். இவ்வாறு சான்றிதழை சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலைகள் அளிக்காவிட்டால், 14 நாள்களுக்குப் பிறகு விவசாயிகள் சர்க்கரைத் துறை ஆணையரிடம் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட விவசாயிக்கு ஆட்சேபமில்லா சான்று வழங்க சர்க்கரை ஆலைக்கு உத்தரவிடப்படும் என்று தனது உத்தரவில் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com