இடைத்தேர்தல்: மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம்

இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளிடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இடைத்தேர்தல்: மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம்

இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளிடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

"நவம்பர் 19 -ஆம் தேதி நடைபெறும் 4 தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடாது' என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் கருத்து, இரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக தேர்தலை, அதிலும் இடைத்தேர்தலை புறக்கணிக்கக் கூடாது என்ற கருத்தைக் கொண்டிருப்பவர்கள் இடதுசாரி கட்சியினர். இந்தக் கருத்தை மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

2012 புதுக்கோட்டை சட்டப்பேரவை இடைத்தேர்தல் என விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர, மற்ற எல்லா இடைத்தேர்தல்களிலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெரும்பாலும் போட்டியிட்டிருக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால், 2009 -இல் திமுக ஆட்சியின்போது நடைபெற்ற இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தபோது, அவர்களுடன் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட்டன.

அப்போதும்கூட, தேர்தலை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருபோதும் புறக்கணிக்காது என்ற கருத்தை அந்தக் கட்சித் தலைவர்கள் அழுத்தமாக பதிவு செய்தனர்.

இப்போதும்கூட, தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தல், திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலிலும், அதை நிலைப்பாட்டில்தான் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இருந்திருக்கக்கூடும்.
இந்த நிலையில், இந்த 4 தொகுதி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடாது என திருமாவளவன் தன்னிச்சையாக அறிவித்தார். அதாவது, மக்கள் நலக்கூட்டணி சார்பாக இந்த நான்கு தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்க மாட்டோம். தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை சில தினங்களில் ஆலோசித்து அறிவிப்போம் என பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இந்த அறிவிப்பு, கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே, குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணியில் உள்ள பிற கட்சித் தலைவர்கள் முடிவு எதுவும் எடுக்கவில்லை எனத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகையில், "4 தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஓரிரு நாள்களில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து, இதுதொடர்பான முடிவு எடுக்கப்படும்' என்றார்.

இதே கருத்தைத் தெரிவித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இடைத் தேர்தல் தொடர்பாக திருமாவளவன் என்ன கூறினார் என்று எனக்குத் தெரியாது. 4 தொகுதிகளுக்கான தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியின் நிலைப்பாடு குறித்து விரைவில் முடிவெடுப்போம்' என்றார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கூட்டணி என்கிறபோது, 4 கட்சித் தலைவர்களும் ஆலோசித்து முடிவெடுத்து, அந்த முடிவை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்தான் வெளியிடவேண்டும். திருமாவளவன் அவர் கருத்தைத்தான் வெளியிட்டிருக்கிறார்.

பொதுவாக, தேர்தலைப் புறக்கணிப்பது இடதுசாரிகளின் வழக்கமல்ல. இருந்தபோதும், தில்லியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்துத் திரும்பியதும், 4 தொகுதி தேர்தலில் போட்டியிடுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து தலைவர்கள் ஆலோசித்து நல்ல முடிவை எடுப்பர் என நம்புகிறோம்'
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com