நெல்லை, தூத்துக்குடியில் பலத்த மழை

திருநெல்வேலி, தூத்துக்குடியில் வியாழக்கிழமை மாலையில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை பெய்த மழையில் குடைபிடித்துச் சென்ற பெண்கள்.
திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை பெய்த மழையில் குடைபிடித்துச் சென்ற பெண்கள்.

திருநெல்வேலி, தூத்துக்குடியில் வியாழக்கிழமை மாலையில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த மூன்று நாள்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாநகரத்தில் வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து அரை மணி நேரம் மிதமான மழைப்பொழிவு இருந்தது. பின்னர், மாலை 5 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அதன்பின்பு தொடர்ந்து 2 மணி நேரம் தூறல் நிலவியது.

திருநெல்வேலி சந்திப்பு, ஸ்ரீபுரம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தி ருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மானூர், தாழையூத்து, சிவந்திப்பட்டி, பத்தமடை, சேரன்மகாதேவி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

அணைப் பகுதியில்... மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் பல்வேறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 10.75 அடியில் இருந்து ஒரே நாளில் 16 அடியாக உயர்ந்தது. அதேபோல வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 1.25 அடியாக வியாழக்கிழமை இருந்தது.

பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்ததால் மேலப்பாளையம், வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை பகுதிகளில் மழையின் காரணமாக 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.

தூத்துக்குடியில்... தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. கடந்த மே மாதத்துக்குப் பிறகு மழை பெய்யத் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வி.இ. சாலை, தேவர்புரம் சாலை, காய்கனி மார்க்கெட் பகுதி, பழைய மாநகராட்சி அலுவலகம், அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் அதிகளவு தேங்கியதால் அந்த வழியாகச் செல்ல முடியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மாலை 5.30 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து தூறிக் கொண்டே இருந்தது. மழை பெய்யத் தொடங்கிய சில நிமிடங்களில் தடைபட்ட மின்சாரம் இரவு 9 மணி வரை வரவில்லை.

தூத்துக்குடி வி.இ. சாலையில் சுகம் ஹோட்டல் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை காற்றில் சரிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், வி.இ. சாலையில் இருந்து ஜின் பாக்டரி சாலைக்கு செல்லும் பாதையில் தடையை மீறி கனரக வாகனங்கள் செல்லத் தொடங்கியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com