கோவையில் தனியார் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயங்கர தீ விபத்து

கோவையில் தனியார் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள்.

கோவையில் தனியார் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
கோவை, தடாகம் சாலை, காந்தி பூங்கா ஏ.கே.எஸ். நகரில் கே.பி.ஆர். என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஐ.ஏ.எஸ். இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு அடுக்குமாடி கட்டடத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், டி.என்.பி.எஸ்.சி., இந்திய ஆட்சிப் பணி, வங்கிப் பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தக் கட்டடத்தின் தரைத் தளத்தில் நூலகம், அலுவலகமும், முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் வகுப்பறைகள், கூட்டரங்குகள் உள்ளன. இந்த நிலையில், பயிற்சி மையத்தில் மாதிரி எழுத்துத் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், தரைத்தளத்தில் இருந்து மாலை 3.35 மணி அளவில் வெடிச் சப்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட புகை முதல் மற்றும் இரண்டாவது தளத்துக்குப் பரவியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கட்டடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். சிலர் புகையில் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து தெற்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையில் சிக்கிக் கொண்டவர்களை ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுளையும் உடைத்து ஏணி மூலமாகக் கட்டடத்துகுள் இருந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் மீட்டுக் கீழே அழைத்து வந்தனர்.
மேலும் கணபதி, பீளமேடு மற்றும் கோவை, வடக்கு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர்.
புகையில் சிக்கிய மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில், மூச்சுத் திணறி உயிருக்கு ஆபத்தான நிலையில் சக்திவேல் (23), காயத்ரி (26), அரங்கநாதன் (25), விஜயலட்சுமி (24), முத்துமணிகண்டராஜா (26), கிரீஷ்ராஜ் (23) ஆகியோருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதில், சிகிச்சை பலனின்றி சதக்திவேல் என்ற மாணவர் உயிரிழந்தார். இவர்களில் காயத்திரி, அரங்கநாதன் ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், விஜயலட்சுமி, முத்துமணிகண்டராஜா, கிரீஷ்ராஜ் ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து முதல் கட்ட விசாரணை மேற்கொண்டுள்ளனர். கட்டடத்தில் மின் கசிவு ஏற்பட்டு, தரைத் தளத்தில் வைக்கப்பட்டிருந்த ரசாயனம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் கட்டடத்தில் இருந்த நூல்கள், கணினி, மின்னணு சாதனங்கள், மரச் சாமான்கள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் கருகின. மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகரக் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ், துணை ஆணையர் லட்சுமி, வருவாய்த் துறை அதிகாரிகள், வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு மீட்புத் துறை அலுவலர் எஸ்.ஆர்.சந்திரன் கூறியதாவது:
தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஐந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 25-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர்.
இந்தக் கட்டடத்தில் பட்டாசு வைத்திருந்ததற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை. மின் கசிவு அல்லது வேறு காரணங்களால் தீ விபத்து நடைபெற்றதா என்பது குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என்றார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆறுதல்: கோவை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியர் த.ந.ஹரிஹரன், சட்டப் பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com