புதுக்கோட்டை அருகே 3,500 ஆண்டுகள் பழைமையான பானைக் குறியீடுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே வில்லுனி ஆற்றங்கரையில் எழுத்துகள் தோன்றுவதற்கு முந்தைய பழைமையான பானைக் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீரமங்கலம் அருகே கண்டெடுக்கப்பட்ட பழங்கால பானை ஓடுகளின் குறியீடு.
கீரமங்கலம் அருகே கண்டெடுக்கப்பட்ட பழங்கால பானை ஓடுகளின் குறியீடு.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே வில்லுனி ஆற்றங்கரையில் எழுத்துகள் தோன்றுவதற்கு முந்தைய பழைமையான பானைக் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது:
வில்லுனி ஆற்றங்கரையில், ராமசாமிபுரம் மங்கலநாடு ஆகிய ஊர்களின் கிராம எல்லையில் 173 ஏக்கரில் இத்திடல் முட்புதர் காடாக உள்ளது.
சுண்ணாம்பு கூட்டுக் கலவை பொருளாலான சிறப்பு வாய்ந்த மேட்டுப் பகுதிகளில் தாழி புதைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கருப்பு சிவப்பு பானை ஓடுகள் விரவிக் கிடக்கின்றன.
இத்துடன் உலோக உருக்குக் கழிவுகளும், உலோக வார்ப்பு மண் உருளைகளும், கண்ணாடி கற்களும் ஒருசில இடங்களில் காணப்படுகிறது.
பானைக் குறியீடுகளில் குறிப்பிட்டுள்ள தலைகீழ் சூலம் போன்ற அமைப்பு போர்த் திறமிக்கவர் புதைக்கப்பட்டுள்ளார் என்பதைக் குறிப்பது என்பதே கிரேக்க தொல்லியலாளர்கள் கருத்து. இந்திய தொல்லியலாளர்கள் பலர் இந்தக் குறியீட்டை மட்பாண்டம் செய்பவரின் அடையாளம் என்று கூறிவரும் நிலையில், இதுபோன்ற குறியீடுகள் இலங்கை, கிரேக்கம், இந்தியாவின் பெருவாரியான பகுதியில் கிடைத்துள்ளதைக் கொண்டும், இதை உலகலாவிய மொழிக் குறியீடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மேலும், மண் அடுக்கை மட்டுமே வைத்து இதுபோன்ற குறியீடுகளின் காலக் கணிப்பை வெளியிடுவதும் சரியானதாக அமையாது.
இந்தக் குறியீட்டு எழுத்துகள், எழுத்து தோன்றுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்தவை என்பதாலும், பெருங்கற்கால குறியீடாகக் கருதப்படுவதாலும், இவை 3,500 ஆண்டுகளுக்கு முந்தையதாகவே கருதவேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி தாழியின் மேற்புறத்தில் கிடந்த மண் கலையத்தில் சிறு பல் எலும்பு முழுமையாக கிடைத்துள்ளதால், இந்தக் குறியீட்டின் காலத்தையும் கதிரியக்க சோதனை மூலமாக ஓரளவு துல்லியமாக வெளிப்படுத்த முடியும். மேலும், வெப்ப ஒளிர்ம சோதனைகள் (thermo lominiscence dating) உள்ளிட்ட அறிவியல் பரிசோதனைகள் மூலம் உறுதியான காலவரையறைக்கு வரமுடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com