வதந்திகளைத் தடுக்க கைது நடவடிக்கைகள் தீர்வாகாது: மனித உரிமைகள் ஆணையத் தலைவர் எச்.எல்.தத்து கருத்து

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி பரவி வரும் வதந்திகளைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்படும்
வதந்திகளைத் தடுக்க கைது நடவடிக்கைகள் தீர்வாகாது: மனித உரிமைகள் ஆணையத் தலைவர் எச்.எல்.தத்து கருத்து

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி பரவி வரும் வதந்திகளைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் தீர்வாகாது என்று தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்எச்ஆர்சி) தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான எச்.எல்.தத்து கருத்துத் தெரிவித்தார்.
1993-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட என்எச்ஆர்சி தொடங்கப்பட்டு 24 ஆண்டுகள் ஆவதையொட்டி தில்லியில் செய்தியாளர்களுக்கு அதன் தலைவர் தத்து பேட்டியளித்தார்.
அப்போது தமிழக முதல்வரின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்புவோர் மீது காவல் துறையினர் மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தத்து கருத்துத் தெரிவிக்கையில், "கருத்துகளை வெளிப்படுத்த மக்களுக்கு கருத்துச் சுதந்திரத்தை அரசியலமைப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்புவதாகக் கூறி சிலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 500 (அவதூறு கருத்து வெளியிடுதல்), 505 (பீதியை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுதல்) ஆகிய சட்டப் பிரிவுகளின்படி கைது நடவடிக்கை மேற்கொள்வது பிரச்னைக்கு தீர்வாகாது. "வதந்தி', "அவதூறு' என்றால் என்ன என்பது பற்றியும் அதைப் பரப்புவோர் மீதான நடவடிக்கைகள் பற்றியும் அண்மையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், வதந்தி பரப்புவோரைத் தடுக்க வேறு வழிமுறைகள் உள்ளன' என்றார்.
காவிரி வன்முறை: இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் காவிரி விவகாரத்தால் வெடித்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக அம்மாநில அரசுக்கு என்எச்ஆர்சி அனுப்பிய நோட்டீஸ் குறித்து கேட்டதற்கு, "இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு அம்மாநில அரசு பதில் அனுப்பவில்லை. மாறாக, பதில் அளிக்க கூடுதல் அவகாசம் கேட்டதால் அதற்கு ஆணையம் அனுமதி அளித்துள்ளது' என்றார் தத்து.
முன்னதாக, செய்தியாளர்களிடம் தத்து கூறியதாவது: நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், அவற்றை மீறும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கும், அரசுகளுக்கும் அவற்றின் கடமையை உணர்த்தும் பணியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட மற்ற அமைப்புகள் கோருவது போல, தேசிய மனித உரிமைகள் ஆணையமும் அதன் பணிகளை மேலும் வலுவாக மேற்கொள்ள கூடுதல் அதிகாரம் தேவை என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்தகைய கூடுதல் அதிகாரம் கிடைக்குமானால் "புலி உறுமல்' போல எங்கள் பணிகளை வீறுகொண்டு செய்வோம்.
நடவடிக்கை எப்போது?: தேசிய மனித உரிமைகள் அனுப்பும் நோட்டீஸ்களுக்கு 90 சதவீத மாநிலங்கள் உரிய பதிலையும் விளக்கத்தையும் அனுப்புகின்றன. அவ்வாறு பதில் அளிக்காத போது சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு முறை வாய்ப்பு அளிப்போம். அதன் அடிப்படையில் வரும் பதில்களின் உண்மைத் தன்மை, மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றிய விவரங்களை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு மூலம் உறுதிப்படுத்துவோம். அதன் பிறகு ஆணையத்துக்கு வரும் புகார்கள் மீது சட்ட நடைமுறைப்படி உரிய நடவடிக்கை எடுப்போம்.
2015, அக்டோபர் முதல் கடந்த செப்டம்பர் வரை ஆணையத்துக்கு வந்த புகார்களில் மனுதாரர்களின் புகார்கள், காவல்துறை, சிறைத் துறை தரப்பில் வந்த புகார்கள், தாமாக முன்வந்து விசாரித்தல் உள்பட மொத்தம் 1,05,664 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 32,498 புகார்கள் காவல் துறைக்கு எதிராகவும், 206 புகார்கள் என்கவுன்ட்டர் சம்பவங்கள் தொடர்பாகவும் பதிவானவை என்றார் தத்து.
பேட்டியின் போது என்எச்ஆர்சி உறுப்பினரும் முன்னாள் நீதிபதியுமான டி.முருகேசன், ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு டிஐஜி சாயா சர்மா உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com