விபத்தில் உதவுவோரின் விவரங்களை தெரிவிக்க கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு உத்தரவு

விபத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவி செய்வோரின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவிறுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவி செய்வோரின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவிறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுகளைத் தொடர்ந்து, இந்த வழிகாட்டுதல்களை போக்குவரத்துத் துறை ஆணையர் சத்யபிரத சாஹு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
விபத்தில் காயமடைந்தவர்களை விபத்து இடர்பாடுகளில் இருந்து காப்பாற்றி உதவி செய்பவர்களைப் பாதுகாப்பது அவசியம். பாதிக்கப்பட்டோரை மருத்துவமனை அழைத்து செல்வோரை எந்தக் கேள்வியும் கேட்காமல் முகவரி மட்டும் பெற்றுக் கொண்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். உதவி செய்பவர்கள் எந்தவொரு சமூக-குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள்.
விபத்து குறித்து தொலைபேசியில் காவல் நிலையம்-விபத்து சிகிச்சை மையத்துக்கு தகவல் தெரிவிப்போரின் பெயர்-சொந்த விவரங்களை தெரிவிக்க நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அளிக்க கட்டாயப்படுத்தக் கூடாது. உதவி செய்வோரின் சொந்த விவரம், தொடர்பு கொள்வது குறித்த விவரங்கள் அளிப்பது அவர்களது விருப்பத்தைப் பொருத்தது. மருத்துவ துறையினரால் வழங்கப்படும் படிவங்களில் பூர்த்தி செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது.
உதவி செய்வோரின் விவரங்களைத் தெரிவிக்க கட்டாயப்படுத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு-துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். உதவி செய்பவர்கள் காயமடைந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினராக இல்லாமல் இருக்கலாம். ஆகவே, உதவி செய்வோரிடம் அனுமதி-பதிவு செய்வதற்கான செலவினம் எதையும் செலுத்தக் கோரக் கூடாது. காயமடைந்தோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
உதவி செய்வோரை ஊக்குவிப்போம்: உதவி செய்பவர்களைக் கைது செய்யவோ, விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சைக்குத் தேவையான தொகையை வைப்புத் தொகையாகச் செலுத்தவோ கோர மாட்டோம் என அனைத்து மருத்துவமனைகளின் நுழைவாயில்களில் அறிவிப்புப் பலகைகளை ஹிந்தி, ஆங்கிலம், மாநில நடைமுறை மொழிகளில் வைக்க வேண்டும்.
உதவி செய்பவர்கள் விருப்பப்படும் சூழலில், மருத்துவமனை நிர்வாகமானது காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த நேரம், விபத்து நிகழ்ந்த இடம், நாள் தொடர்பான விவரங்களை வழங்கலாம். இதற்காக மாநில அரசு ஒரு நிலையான படிவம் தயார் செய்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்ப வேண்டும்.
இந்த நடைமுறைகளை அனைத்து அரசு-தனியார் மருத்துவமனைகளுக்கு உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். இதை கடைப்பிடிக்கத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com