3 தொகுதிகளுக்கான தேர்தல்: மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என்று அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.
3 தொகுதிகளுக்கான தேர்தல்: மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என்று அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.
மதிமுகவின் உயர்நிலைக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை வகித்தார். வைகோ முன்னிலை வகித்தார். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் 3 தொகுதிகளுக்கான தேர்தல், காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு வைகோ கூறியது:
தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளருக்குப் பணம் கொடுத்ததன் காரணமாகத்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது திமுக, அதிமுக சார்பில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர்களுக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, 3 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடப் போவதில்லை. தேர்தலைப் புறக்கணிக்கிறது.
ஏமாற்று வேலை: காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்குத் துரோகம் செய்த கட்சி திமுக. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் -திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த காலத்திலும் காவிரிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது என்பது ஒரு ஏமாற்று வேலை; அரசியல் நாடகமாகும். இந்தக் கூட்டத்தை நடத்தப்போவதாகக் கூறும் மு.க.ஸ்டாலின்தான் மீத்தேன் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, தமிழகத்துக்குத் துரோகம் இழைத்தவர். இதனால், ஸ்டாலின் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மதிமுக பங்கேற்காது என்றார்.
கண்டனம்: தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், கர்நாடக மாநிலத்துக்குத் துணை போகும் விதத்திலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள பிரதமர் மோடிக்கு இந்தக் கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது. நியாயவிலைக் கடைகளின் அரிசி விலையை மூன்று மடங்கு உயர்த்தி இருப்பதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்.
பருவ மழை விரைவில் தொடங்க இருப்பதால் பேரிடர்களை எதிர்கொள்ளத்தக்க வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com