அனைத்துக் கட்சிக் கூட்டமா?, கூட்டணிக் கட்சிகள் கூட்டமா?

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தவிர, பெரிய கட்சிகள் எதுவும் பங்கேற்கப் போவதில்லை என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டமா?, கூட்டணிக் கட்சிகள் கூட்டமா?

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தவிர, பெரிய கட்சிகள் எதுவும் பங்கேற்கப் போவதில்லை என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 3 பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலைக் கருத்தில் கொண்டே, திமுக இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக பிற கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வருகிற செவ்வாய்க்கிழமை (அக். 25) அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி என தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல் எதிர்ப்பு: இந்தக் கூட்ட அழைப்புக்கு முதலில் பாஜகவிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. "காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதற்கு திமுகவுக்கும் காங்கிரஸýக்கும் எந்தத் தகுதியும் இல்லை. 40 ஆண்டுகளாக இந்த விவகாரம் நீடித்து வருவதற்கு திமுகவும், காங்கிரஸýமே காரணம். இந்தக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது' என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முதலாவதாக கருத்துத் தெரிவித்தார். பாஜகவின் மனநிலையில்தான் தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளும் இருந்து வருகின்றன.

எதிர்ப்பு ஏன்?: திமுக சார்பில் ஏற்கெனவே அனைத்துக் கட்சி விவசாய அணிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 13-ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எதிர்பாராத திருப்பமாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பெரிய கட்சிகள் எதுவும் கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், இடதுசாரிகள் பங்கேற்றது திமுகவுக்கு உற்சாகத்தை அளித்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் தற்போது அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், இந்தக் கூட்டத்தில் இடதுசாரிகள் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் பங்கேற்கப் போவதில்லை.
"கடந்த முறை விவசாய அணிகளின் கூட்டம் என்று திமுக அழைத்தது. அதன் காரணமாக, அந்தக் கூட்டத்தில் பங்கேற்றோம். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

ஆனால், இப்போது காவிரி விவகாரத்துக்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால், கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுகவிடம் தெரிவித்துவிட்டோம்' என்றார் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகள் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு உள்பட்டவை என்பதால், அனைத்துக் கட்சிகளையும், அனைத்து விவசாய அமைப்புகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம், தங்களது தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று திமுக கருதுகிறது.

மேலும், தலைவர் பதவியில் இருந்து கருணாநிதி விலகி வழிவிடாத நிலையில், அனைத்துக் கட்சிகளும் தனது தலைமையில் ஒருங்கிணையும் போது கட்சியிலும் தனது நிலையை உயர்த்திக்கொள்ள இது உதவும் என ஸ்டாலின் கருதுகிறார்.

இந்த அரசியல் சூட்சுமம் தெரிந்துதான், திமுக அழைப்பு விடுத்துள்ள இந்தக் கூட்டத்தை இடதுசாரிகள் உள்ளிட்ட பிற கட்சிகளும் புறக்கணிக்கின்றன.
மேலும், அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை திமுகவின் கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் கூட்டுவதையும் அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை.
அரசியல் நாடகத்துக்காக நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகளையும், மாவட்டச் செயலர்களையும் திமுகவுக்கு இழுத்தவர் ஸ்டாலின். அதனால், அவர் அழைக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவில் விஜயகாந்த் உள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் காவிரி உள்பட தமிழக விவகாரங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று பிரதமரை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது, கருணாநிதி உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் விஜயகாந்த் சந்தித்து ஆதரவு கோரினார். விஜயகாந்துடன் திருச்சி சிவாவை கருணாநிதி அனுப்பிவைத்தார். தற்போது திமுக அழைக்கும் போது தேமுதிக பங்கேற்காமல் இருப்பது சரியா என்ற தயக்கம் விஜயகாந்துக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும், தேமுதிக சார்பிலும் திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு யாரையும் அனுப்புவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
ஆளும் அதிமுக அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யாத நிலையில், எதிர்க்கட்சியான திமுக இந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரியவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். ஆனால், திமுக சார்பில் நடைபெற்ற விவசாய அணிகளின் கூட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அழைக்கப்படவில்லை. இதனால், அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து திருமாவளவனும் தயங்கி வருகிறார். பாமகவும் இதே நிலையில்தான் இருந்து வருகிறது.

தற்போதைய நிலையில், காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமே அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளன. அதனால், இதை அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதைவிட திமுக கூட்டணியின் கூட்டம் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும், என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com