தமிழகத்தில் 7 மாதங்களில் 47 காட்டு யானைகள் உயிரிழப்பு

தமிழகத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை பல்வேறு காரணங்களால் 47 காட்டு யானைகள் உயிரிழந்தன.
தமிழகத்தில் 7 மாதங்களில் 47 காட்டு யானைகள் உயிரிழப்பு

தமிழகத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை பல்வேறு காரணங்களால் 47 காட்டு யானைகள் உயிரிழந்தன. ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் 14 யானைகள் இறந்தன. ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் 80-90 யானைகள் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 4,000 யானைகள் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், இந்தாண்டு தமிழகத்தில் 7 மாதங்களில் மட்டும் ஏற்பட்ட யானைகள் உயிரிழப்புகளால் விலங்கியல் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முக்கியமாக, யானைகளின் வழித்தடங்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலேயே அவை உயிரிழக்க நேரிடுகின்றன.
இந்தாண்டு மின் வேலியில் சிக்கியும், ரயில், வாகனங்களில் அடிபட்டும் யானைகள் அதிகமாக தமிழகத்தில் உயிரிழந்துள்ளன. குறிப்பாக, கோவை- கேரள ரயில் பாதைகளில் யானைகள் அடிபட்டு அதிகம் உயிரிழந்துள்ளன.
கோவை, ஒசூர், தருமபுரி, ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப் பகுதிகளில்தான் யானைகள், மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன. இவற்றில், கோவை மாவட்ட வனப் பகுதி இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது.
யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு இப்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தண்ணீர், உணவைத் தேடி மனிதர்களின் வசிப்பிடங்களுக்கு யானைகள் வருகின்றன. எனவே, வனப் பகுதிக்கு உள்பட்ட சில இடங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் மோட்டார் மூலம் எடுக்கப்பட்டு, இந்தத் தண்ணீர்த் தொட்டியில் தேக்கப்படுகிறது. இந்த மோட்டார்களுக்கு தேவையான மின்சாரம் சூரிய ஒளி மூலம் பெறப்படுகிறது.
மின் வேலிகள் அனைத்துக்கும் பேட்டரியில் வரும் மின்சாரத்தையே பாய்ச்ச வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது இவை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டும் வருவதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், யானைகளுக்குப் பிடித்தமான உணவு வகைகள், செடிகள், மரங்கள் போன்றவை வன எல்லையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றையும் மீறி யானைகள் வராமல் தடுப்பதற்கு வனப் பகுதி முழுவதும் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன.
யானைகளை விரட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான பட்டாசு, உபகரணங்கள் ஆகியவை வனத் துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள், யானைகள் ஊருக்குள் வந்தால், அவற்றை வனத்துக்குள் விரட்டி அடிக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து இயக்குநர் வனத் துறை ஐ.ஜி. மற்றும் இயக்குநர், யானைகள் பாதுகாப்பு திட்டம் (புது தில்லி) ஆர்.கே.ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் முயற்சியாக, கோவை மாவட்ட எல்லையான வாளையாறு- எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை ஒட்டிய வனப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. யானை வழித்தடப் பகுதிகளில் ரயிலை 20-30 கி.மீ. வேகத்தில் இயக்குமாறு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சாலை, ரயில் பாதைகளில் இது யானைகள் வழித்தடம் எனக் குறிக்கும் வகையில் ஒளிரும் எச்சரிக்கைப் பலகைகள் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கிய இடங்களில் "இன்ஃப்ரா ரெட் சிசிடிவி கேமராக்கள்' பொருத்தப்பட்டு, யானைகளைக் கண்காணிக்கவும் வழிவகை கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், யானைகள் வேட்டையாடப்படுவதும் தடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com