முதல்வரை மீண்டும் சந்தித்தார் ஆளுநர் வித்யா சாகர் ராவ்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆளுநர் வித்யா சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
முதல்வரை மீண்டும் சந்தித்தார் ஆளுநர் வித்யா சாகர் ராவ்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆளுநர் வித்யா சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 முதல் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை குறித்து அறிய வித்யாசாகர் ராவ் 2-ஆவது முறையாக மருத்துவமனைக்கு சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு வந்தார். சுமார் 30 நிமிடங்கள் அமைச்சர்கள், மருத்துவர்களை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவக் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி ஆளுநருக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
அப்போது, தீவிர சிகிச்சைக் குழுவில் உள்ள நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்துவருவதாக பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.
முதல்வரின் இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாடு குறித்தும், சுவாசத்துக்கு ஆதரவு அளிக்கும் சிகிச்சை, இயன்முறை மருத்துவம் (பாஸிவ் ஃபிஸியோதெரபி) ஆகியன தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் பிரதாப் ரெட்டி கூறினார்.
சிகிச்சைகளுக்கு முதல்வர் சிறப்பான ஒத்துழைப்பைத் தருவதுடன், அவர் உரையாடியும் வருகிறார்.
முதல்வர் சிகிச்சை பெறும் அறைக்கு ஆளுநர் நேரில் சென்று பார்த்தார். அப்போது, முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை அறிந்து ஆளுநர் மகிழ்ச்சி அடைந்தார்.
சிறந்த பராமரிப்பை வழங்கி சிகிச்சை அளித்து வருவதற்காக மருத்துவ நிபுணர்கள் குழுவுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவமனைக்கு வந்த ஆளுநரை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் ராம மோகன ராவ், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com