உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தது: இன்றுமுதல் தனி அதிகாரிகள் நிர்வகிப்பர்

உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் திங்கள்கிழமையோடு நிறைவு பெற்றது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் தனி அதிகாரிகள் பொறுப்பேற்க உள்ளனர்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் திங்கள்கிழமையோடு நிறைவு பெற்றது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் தனி அதிகாரிகள் பொறுப்பேற்க உள்ளனர்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக். 17, 19-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனுக்களும் செப். 24 முதல் அக். 3 வரை பெறப்பட்ட நிலையில், அக். 4-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலனையும் நடைபெற்றது.
இந்த நிலையில், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை உள்ளிட்ட காரணங்களைக் காட்டி திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், டிசம்பர் 31-க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், இதற்காக தனி அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்டோபர் 24-ஆம் தேதியோடு நிறைவு பெறும் நிலையில், அவற்றை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நிர்வகிப்பதற்கான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் (பொறுப்பு) கடந்த 17-இல் பிறப்பித்தார்.
இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின்பேரில், அனைத்து உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சி உள்பட நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு தனி அதிகாரிகளை நியமித்து, நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல் துறையும், ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு அதிகாரிகளை நியமனம் செய்து ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறையும் உத்தரவுகளை திங்கள்கிழமை பிறப்பித்தது. இந்த உத்தரவுகளின் விவரம்:-
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகளின் பணிகளை தனி அதிகாரிகள் மேற்கொள்வர்.
மாநகராட்சிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர்களும், நகராட்சிகளுக்கு நகராட்சி ஆணையாளர்களும், பேரூராட்சிகளில் (இரண்டு வகையான பேரூராட்சிகள்) உதவி இயக்குநர் அல்லது செயல் அலுவலர்கள் தனி அதிகாரிகளாக செயல்படுவர்.
ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்கள்:

31 மாவட்ட ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, 31 மாவட்ட ஊராட்சி பதவியிடங்களுக்கு கூடுதல் இயக்குநர் அல்லது கூடுதல் ஆட்சியர் அல்லது இணை இயக்குநர் அல்லது மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமைகளின் திட்ட இயக்குநர் ஆகியோரில் யாரேனும் ஒருவர் தனி அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு நிலைகளில் உள்ள அதிகாரிகள் தனி அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
அதாவது, உதவி இயக்குநர் (பஞ்சாயத்துகள்), உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகிய ளில் உள்ள அதிகாரிகள் ஊராட்சி ஒன்றியங்களுக்கு தனி அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளை நிர்வகிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்றுமுதல் அமல்: இதற்கான தமிழக அரசின் உத்தரவு வெளியான நிலையில், அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை (அக். 25) முதல் தங்களது பொறுப்புகளை ஏற்கவுள்ளனர்.
தனி அதிகாரிகள் ஏற்கெனவே அரசுத் துறைகளில் பொறுப்பில் இருப்பதால் அவர்கள் தனி அதிகாரி பொறுப்பை கூடுதல் பொறுப்பாக ஏற்றுச் செயலாற்றுவார்கள் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, கிராம ஊராட்சி முதல் மாநகராட்சி வரையில், 1,18,974 ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களும், 12,820 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களும் என 1,31,794 பதவியிடங்கள் தனி அதிகாரிகள் மூலம் நிர்வகிக்கப்பட உள்ளன.

தனி அதிகாரிகள் நிர்வகிக்கும் பதவியிடங்கள்
மொத்தமுள்ள பதவியிடங்கள்}1,31,794
(நகர்ப்புறம்-12,820, ஊரகம்-1,18,974)
31 மாவட்ட ஊராட்சிகள் 655 வார்டு உறுப்பினர்கள்
(கூடுதல் இயக்குநர், கூடுதல் ஆட்சியர், இணை இயக்குநர்,
மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமைகளின் திட்ட இயக்குநர்).
388 ஊராட்சி ஒன்றியங்கள் 6,471 வார்டு உறுப்பினர்
(உதவி இயக்குநர்-ஊராட்சிகள், உதவி இயக்குநர்-தணிக்கை).
12,524 கிராம ஊராட்சித் தலைவர் 99,324 வார்டு உறுப்பினர்
(வட்டார வளர்ச்சி அலுவலர்)
12 மாநகராட்சிகள் 919 மன்ற உறுப்பினர்கள்
(மாநகராட்சி ஆணையாளர்கள்)
124 நகராட்சிகள் 3,613 மன்ற உறுப்பினர்கள்
(நகராட்சி ஆணையாளர்கள்)
528 பேரூராட்சிகள் 8,288 வார்டு உறுப்பினர்கள்
(உதவி இயக்குநர்கள் அல்லது செயல் அலுவலர்கள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com