திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விசிக பங்கேற்காது: திருமாவளவன்

திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் முடிவின்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்க
திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விசிக பங்கேற்காது: திருமாவளவன்

சென்னை: திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் முடிவின்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்க முடியவில்லை என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வந்தன. ஆனால், அரசு அதற்கு முன் வரவில்லை. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செவ்வாய்க்கிழமை (அக்.25) அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி உள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பும் அனுப்பி இருக்கிறார். இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக பாஜக, தேமுதிக கட்சிகள் அறிவித்துவிட்டன.
அதுபோல, மக்கள் நலக் கூட்டணியும் புறக்கணிப்பதாக அறிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்ட கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, "திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒரு நாடகம். அதில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் கலந்து கொள்ளாது' என்றார்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "திமுக அதிகாரத்தில் இருந்தபோது காவிரிப் பிரச்னை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவிப்பது நம்பத்தகுந்ததல்ல. அதனால்தான், அவர்கள் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவை கூட்டணி எடுத்துள்ளோம்' என்று மீண்டும் தெரிவித்தார்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கருத்துக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது எனவும், இதுதொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசிப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து, திமுக கூட்டும் கூட்டத்தில் பங்கேற்குமாறும் திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
மூன்று தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை புதன்கிழமை (அக்.26) தொடங்க உள்ள சூழலில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மற்ற கட்சிகளைப் பங்கேற்க வைத்து எல்லா கட்சிகளும் திமுக-வை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க எடுக்கும் முயற்சிதான் இது என்கின்றனர் மதிமுக நிர்வாகிகள்.
இந்நிலையில், "திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்தும், அதில் பங்கேற்பது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியின் தோழமைக் கட்சித் தலைவர்களின் முடிவின்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்க முடியவில்லை என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திருமாவளவன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com