திமுக கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றால் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும்: திருமாவளவன் விளக்கம்

திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வது கட்சி தொண்டர்களியிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்குமென
திமுக கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றால் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும்: திருமாவளவன் விளக்கம்

சென்னை: திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வது கட்சி தொண்டர்களியிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்குமென தங்களின் தயக்கத்தை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வெளிப்படுத்தியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்க இயலாதநிலையில் உள்ளோம் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மைய அரசை  வலியுறுத்தும் வகையில் இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில்  பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு  அழைப்பு விடுத்தமைக்காக தங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

காவிரிநீர்ச் சிக்கல் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென திமுக உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், தமிழக அரசு இக்கோரிக்கையை  ஏற்கவில்லை. இந்நிலையில், தங்களின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறோம்.

காவிரிநீர்ச் சிக்கல் என்பது தமிழகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு நெருக்கடியான நிலைக்குத் தள்ள பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதனை மத்திய அரசு வெளிப்படையாக புறக்கணித்துள்ளது. தமிழக மக்களுக்கு எதிரான மையஅரசின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து தமிழக மக்கள் யாவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய வரலாற்று தேவை தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று தங்களின்  தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின்  விருப்பமாகும். கடந்த 13.10.2016 அன்று தங்களின் தலைமையில் நடந்த விவசாய சங்கத் தலைவர்களின் கூட்டத்தில் மக்கள் நல கூட்டணியைச் சார்ந்த சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் விவசாய சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதனடிப்படையில், இன்று நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்திலும் மக்கள் நல கூட்டணி கட்சிகள் பங்கேற்கலாம் என்பதை எமது கூட்டணி கட்சித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்வைத்தோம்.

காவிரிநீர்ச் சிக்கலைத்  தேர்தல் அரசியலோடு முடிச்சு போடாமல் அணுகவேண்டுமென்பதே விடுதலைச் சிறுத்தைகளின் உறுதியான நிலைப்பாடாகும். அந்த அடிப்படையில்தான் மக்கள் நல கூட்டணியின் தோழமை கட்சிகளையும் இக்கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். 24.10.2016 அன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் உயர்நிலைக்குழுவில் மக்கள் நல கூட்டணியின் நலன்களையும் கருத்தில் கொண்டு திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில்தான் மக்கள் நல கூட்டணியின் தோழமை கட்சித் தலைவர்களுடன் மீண்டும் கலந்தாய்வு செய்தோம்.

அப்போது, தஞ்சாவூர்,அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் மக்கள் நல கூட்டணி பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள்ள சூழலில், திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வது கட்சி தொண்டர்களியிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்குமென தங்களின் தயக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், மக்கள் நல கூட்டணியின் ஒரு அங்கமாக இயங்கிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்கள் நல கூட்டணியின் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் நிலையில் உள்ளது. அதாவது, மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் இச்சூழலில் தங்களின் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாதநிலையில் உள்ளோம் என்பதை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com