நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த கோரி பாஜக சாலை மறியல்: 100 பேர் கைது

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என....

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி மாநில பாஜக சார்பில் ரெட்டியார்பாளையம் தேர்தல் துறை அலுவலகம் அருகே புதன்கிழமை சாலை மறியல், முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. வாக்காளர்கள் பணம் வழங்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபடுகின்றனர். தேர்தல் நேர்மையாக நடைபெறாது. எனவே தேர்தல் துறை பணப்புழக்கத்தை தடுத்து, தேர்தலை முறையாக ஜனநாயக முறையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில்தேர்தல் துறை அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

மாநில தலைவர் வி.சாமிநாதன் தலைமை தாங்கினார். பொதுச் செயலர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் தாமோதரன், கேசவலு, துணைத் தலைவர்கள் சோமசுந்தரம், செல்வம், துரைகணேசன், செயலர்கள் முருகன், நாகராஜ், ஜெயந்தி லட்சுமி, மாவட்டத் தலைவர்கள் சிவானந்தம், மூர்த்தி, சக்திபாலா, கௌரிசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதையடுத்து பாஜகவினர் விழுப்புரம் சாலையில் மறியல் செய்தநர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து ரெட்டியார்பாளையம் போலீஸார் மறியல் செய்த 100-க்கு மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். பாஜகவினர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com