அக்.30-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30-ஆம் தேதியளவில் தொடங்குவதற்கான சூழல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30-ஆம் தேதியளவில் தொடங்குவதற்கான சூழல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
பருவமழை அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் 20-ஆம் தேதியளவில் தொடங்கும். ஆனால் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழைக் காலம் நிறைவு பெற தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், வடகிழக்காக காற்று வீசாமல் தென்கிழக்காகவே காற்று வீசி வருகிறது. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவது தாமதிக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது காற்றழுத்த மண்டலமாக மாறி, புயலாக உருவானது. "கியாத்' என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலானது வங்கக் கடலில் நீடிப்பதால், வடகிழக்கு பருவமழை தொடங்குவது மேலும் தாமதமாகி வருகிறது.
இது தொடர்பாக பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான "கியாத்' புயலானது அடுத்த 3 நாள்களில் மத்திய மேற்கு வங்கக்கடலை நோக்கி நகரும். இந்த புயல் தற்போது கரையைக் கடப்பதற்கான வாய்ப்பு இல்லை.
கடல் பகுதியின் மையத்தில் உருவாகியுள்ள இந்தப் புயலின் காரணமாக தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. புயலின் தாக்கம் குறைந்து, வலுவிழந்தால் மட்டுமே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியங்கள் உருவாகும். இதனால் அக்டோபர் 30-ஆம் தேதியளவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையின் சராசரி 440 மி.மீ. ஆகும். இந்த ஆண்டு 100 சதவீதம் அல்லது 90 சதவீதம் பெய்யக்கூடும். அதாவது நிகழாண்டு பருவமழையின் சராசரி 390 மி.மீட்டலிருந்து 440 மி.மீ. வரை காணப்படும். இந்நிலையில் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக தமிழக மீனவர்கள் ஆந்திர கடல்பகுதியை நோக்கிச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்றார் அவர்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 40 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தென்காசியில் 30 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, ராமேசுவரம் மாவட்டம் கடலாடி, பரமக்குடி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 20 மி.மீ, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரத்தில் 10 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com