இனிப்பகங்கள், மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

தீபாவளி பண்டிகை எதிரொலியாக புதுச்சேரியில் இனிப்பகங்கள், மளிகைக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

புதுச்சேரி: தீபாவளி பண்டிகை எதிரொலியாக புதுச்சேரியில் இனிப்பகங்கள், மளிகைக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தரமான எண்ணெய்யில் இனிப்புகளை தயார் செய்வதில்லை என்றும் அங்கீகரிக்கப்படாத ரசாயன பொடி மற்றும் வண்ணங்களை சேர்க்கிறார்கள் என உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு துறைக்கு புகார்கள் வந்தன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுகாதாரத்துறை செயலாளர் பிஆர்.பாபு, ஆட்சியர் டாக்டர் சத்யேந்திர சிங் துர்சாவத் உள்ளிட்டோர் உத்தரவின்பேரில் இனிப்பகங்கள், மளிகைக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நியமன அதிகாரி பாலகிருஷ்ணன், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஐ.தன்ராஜ், ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது. இதனையடுத்து  புதுவை அண்ணா சாலை, மகாத்மா காந்திசாலை, பாரதி வீதி  முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள இனிப்பு கடைகளை திடீர் சோதனை செய்தனர். அக்கடைகளில் இனிப்புகள் மாதிரி எடுக்கப்பட்டன.

இந்த இனிப்புகளை கலப்பட எண்ணெய்யில் செய்கிறார்களா? என ஆய்வுக்கு உட்படுத்தப்பட அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தரமான எண்ணெயில் உணவு பண்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் தன்ராஜ் கூறியதாவது: மேலும் இனிப்பு கடைக்கு உரிய உரிமம் பதிவு செய்ய பட்டுள்ளதா? என்றும் சோதனை செய்யப்பட்டது. மேலும், உணவு பண்டங்கள் தயாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதனையும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அனுமதி பெறாதவர்கள் உணவு பண்டங்களை தயாரித்தால் அவை பறிமுதல் செய்யப்படும். வில்லியனூரில் ஏற்கெனவே 20-க்கு மேற்பட்ட இனிப்பு, மளிகை கடைகளில் சோதனை செய்யப்பட்டு மாதிரி சேகரிக்கப்பட்டது. தற்போது 3-வது நாளாக கடைகளில் சோதனை மேற்கொண்டோம்.

மாதிரிகள் ஆய்வகங்களில் சோதனை செய்யப்படும். இதில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும். உணவு கலப்படம் செய்தால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை, ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார் தன்ராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com