சாலைப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை

கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற சாலைப் பணிகள் குறித்து, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சாலைப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை

கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற சாலைப் பணிகள் குறித்து, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள், மேம்பாட்டுப் பணிகள் போன்றவை நடைபெறுவதாகவும், குறிப்பாக 40 சதவீதத்துக்கும் மேல் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்களை மாவட்டச் சாலைகளுடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
நிகழாண்டுக்கான மாநில நெடுஞ்சாலைகள்- சிறு துறைமுகங்கள் துறையின் செயலாக்கத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இடைக்கால நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும், 2015-16-ஆம் ஆண்டுக்கு ரூ.3,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2016-17-ஆம் ஆண்டுக்கான நிநிநிலை அறிக்கையில் திருத்தப்பட்டப்பட்ட வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 1,000 கி.மீ சாலை அகலப்படுத்தும் பணிகளும், 3 ஆயிரம் கி.மீ. சாலை மேம்படுத்தும் பணிகளும் நிறைவேற்றப்படும். அதற்காக ரூ.2,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவேறியுள்ளதா?
2015-16, 2016-17-ஆம் ஆண்டுகளில் புதிதாக அறிவிக்கப்பட்ட சாலைப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விட்டனவா என்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
3-ஆவது இடத்தில் தமிழகம்: தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விபத்துகளால் மரணம் நிகழ்வதில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. மோசமான சாலைகளால் ஏற்படும் மரணங்களில் பிகார், உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் தமிழகம் இருப்பதாகக் கூறியுள்ளது.
எனவே, ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலைப் பணிகளின் நிலை குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com