அரசு மருத்துவமனையில் 'அம்மா மூலிகைப் பண்ணை': வேட்டைக்காரன்புதூரில் ஒரு முன்மாதிரி

கோவை மாவட்டம், வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில், மற்ற மருத்துவமனைகளுக்கு முன்மாதிரியாக 'அம்மா மூலிகைப் பண்ணை' அமைக்கப்பட்டுள்ளது.
வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டடுள்ள அகத்தியர் சிலை.
வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டடுள்ள அகத்தியர் சிலை.

கோவை மாவட்டம், வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில், மற்ற மருத்துவமனைகளுக்கு முன்மாதிரியாக 'அம்மா மூலிகைப் பண்ணை' அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தொன்மையான மருத்துவம், சித்த மருத்துவம். இது, தமிழுக்கும், தமிழர்களின் தொன்மையான பண்பாட்டுக்கும் சான்றாக விளங்கி வருகிறது. அகத்தியர், திருமூலர், போகர் முதலான பதினென் சித்தர்கள் மூலிகைகளைக் கொண்டு மருத்துவம் செய்துவந்தனர். அதுவே சித்த மருத்துவமாகும்.

தற்போதைய தலைமுறையினர் மூலிகைகளை மறந்துவிட்டதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அலோபதி மருத்துவத்தால் கட்டுப்படுத்த முடியாத நோய்களைக்கூட சித்த மருத்துவம் மூலமாக குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்பதை அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சித்த மருத்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

அதன்படி, சித்த மருத்துவம் குறித்து விளம்பரங்கள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. டெங்கு, வைரஸ் காய்ச்சல் வராமல் தடுத்திடவும், கட்டுப்படுத்தவும் நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு போன்றவற்றை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மகப்பேறுக் காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தைக் காக்க 11 வகை மூலிகைகள் கொண்ட "அம்மா மகப்பேறு சஞ்சீவி'யும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இப்படி சித்த மருத்துவத்துக்குப் புத்துயிரளித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் "அம்மா மூலிகைப் பண்ணை' என வேட்டைக்காரன் புதூர் அரசு சித்த மருத்துவமனையில் முன்மாதிரி மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

மூலிகைகள்: இந்த மூலிகைப் பண்ணையில், சளி, இருமலை குணப்படுத்தும் ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, கருந்துளசி, குடல் புண்ணை குணப்படுத்தும் கற்றாழை, வில்வம், செங்கற்றாழை, புற்றுநோயைக் குணப்படுத்தும் நித்யகல்யாணி, சிறுநீரகச்செயலிழப்பைத் தடுக்கும் விஷநாராயணி, கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும் கரிசாலை, பொன்னாங்கண்ணி, கால்சியம் சத்து நிறைந்த பிரண்டை, முறிகூட்டி, ரத்த மூலத்தை குணப்படுத்தும் அய்யம்பனை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அரிய மூலிகைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அகத்தியருக்கு சிலை: மூலிகைப் பண்ணை மட்டுமின்றி பதினென் சித்தர்களில் முதன்மையானவரும், "அகத்தியம்' என்னும் தமிழின் முதல் இலக்கண நூலை எழுதியவரும், பல சித்த மருத்துவ நூல்களையும், வர்ம நூல்களையும் எழுதியவருமான அகத்திய முனிவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அரசு வழங்கும் மருந்துகளுடன் இந்தப் பண்ணையில் கிடைக்கும் மூலிகைகளை நோயாளிகளுக்கும் வழங்கி, நோயைக் கட்டுப்படுத்தும் பணியில் சித்த மருத்துவர் நல்லதம்பி ஈடுபட்டுள்ளார். இங்கு வளர்க்கப்பட்டு வரும் அரிய மூலிகைச் செடிகளை பொதுமக்களும் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:

வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மூலிகைப் பண்ணையில் உள்ள மூலிகைகளால் பல வகை நோய்களுக்கு மருந்து கிடைக்கிறது. சித்த மருத்துவப் பிரிவில் கிடைக்கும் மருந்துகளுடன் மூலிகைகளையும் இங்குள்ள மருத்துவர் வழங்குகிறார். இதனால், எங்களுக்கு மூலிகைப் பண்ணை பெரும் பயனுள்ளதாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் இதுபோன்ற சிறிய மூலிகைப் பண்ணைகளை அமைத்தால் அரிய மூலிகைகள் அழியாமல் பாதுகாக்கப்படுவதுடன் நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் நல்லதம்பி கூறியதாவது:

சித்த மருத்துவத்துக்கு முதல்வர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். முதல்வரின் முயற்சிக்கு நன்றி பாராட்டும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் இடத்தில் இந்த மூலிகைப் பண்ணை அமைத்து "அம்மா மூலிகைப் பண்ணை' என பெயரிட்டு வளர்த்து வருகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com