சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 'அன்புள்ள CM அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நலன் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதாவின் காய்ச்சல் குணமாகிவிட்டது. அவர் வழக்கம்போல் உணவு சாப்பிடுகிறார். எனினும், மருத்துவர்களின் தொடர் கண்காணப்பில் அவர் இருந்து வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டது.