திருவாரூர் கோயிலில் தமிழிக் கல்வெட்டு

திருவாரூர் தியாகராசர் கோயிலில் தமிழிக் கல்வெட்டு இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளது
திருவாரூர் கோயிலில் கண்டயறியப்பட்ட தமிழிக் கல்வெட்டு.
திருவாரூர் கோயிலில் கண்டயறியப்பட்ட தமிழிக் கல்வெட்டு.

திருவாரூர் தியாகராசர் கோயிலில் தமிழிக் கல்வெட்டு இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தியாகராசர் கோயிலில் ஆனந்தனேஸ்வரர் தியான மண்டபம் அருகே மதில்சுவரில் தொன்மையான 2 வரியில் உள்ள தமிழிக் கல்வெட்டை கள்ளக்குறிச்சி பல் மருத்துவர் அருண்குமார் கண்டெடுத்தார். இவர் அளித்த தகவலின் அடிப்படையில், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சோ. கண்ணதாசன், பொந்தியாகுளம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் கோ.தில்லை கோவிந்தராசன், திருவாரூர் திரு.வி.க. அரசுக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் மு. அருணகிரி ஆகியோர் இணைந்து அந்தக் கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:

பண்டைகாலத்தே வழங்கிய 18 வகையான எழுத்து வடிவப் பெயர்களைக் குறிப்பிடும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமய வயங்க சுத்த எனும் சமண நூலில் தமிழி என்ற பெயர் காணப்படுகிறது. இதன் காரணமாகத் தென்னகத்தே வழங்கிய எழுத்து வடிவத்தைத் தமிழி என்றனர். இந்தத் தமிழிக் கல்வெட்டுக்கள் வட பிராமியிலிருந்து மாறுபட்டுத் தமிழுக்கே உரிய சிறப்பெழுத்துக்களாக எ, ஒ, ழ, ற, ன கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த எழுத்து வடிவமே கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் தமிழ், வட்டெழுத்தென இருவகைகளாக வளரத் தலைப்பட்டன. இத்தகைய எழுத்து வடிவ மாற்றங்களை ஈரோடு மாவட்டம் அரச்சலூர், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி, மதுரை மாவட்டம் மாங்குளம் போன்ற ஊர்களில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளில் காணலாம்.

இதுவரை சோழ நாட்டில் பல்லவர் காலம் முதல் தமிழ் வடிவ எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகளே கண்டறியப்பட்டு வந்த நிலையில், இந்தத் தமிழி எழுத்து கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த எழுத்தமைதியில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வரலாற்று ஆய்வாளர்கள் சோழ நாட்டில் பாண்டிய மன்னன் ஒருவன் திருவிடைவாயில் கோயிலுக்குக் கொடையாக வழங்கிய சங்கில் மட்டுமே வட்டெழுத்துத் தமிழ் காணப்படுகிறதே தவிர, வேறெங்கும் வட்டெழுத்துத் தமிழ்க் கல்வெட்டுக் காணப்பெறவில்லை என்பர்.

இந்த நிலையில், சோழநாட்டில் முதல் முறையாக திருவாரூர் கோயிலில் தமிழி, வட்டெழுத்து வடிவ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சோழநாட்டில் புதியதாகக் கண்டறியப்பட்டுள்ள இக்கல்வெட்டைப் பொருள் பொருத்தப்பாட்டுடன் வாசிக்க முடியாத நிலையில், பூலாங்குறிச்சியில் காணப்பெறும் வல்லின றகரம், சித்தன்னவாசலில் காணப்பெறும் சிறப்பு ழகரம் ஆகிய தமிழி வடிவங்களையும், அரச்சலூரில் காணப்பெறும் எகர குறிலுமாகிய வட்டெழுத்து வடிவம் இக்கல்வெட்டில் முதல் வரிசை இரண்டாம் எழுத்தில் றகர தமிழியெழுத்து, ஆறாம் எழுத்தில் எகர வட்டெழுத்து, கடைசி எழுத்தில் சிறப்பு ழகர தமிழி எழுத்து இடம்பெற்றுள்ளதால், இக்கல்வெட்டு தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.

எனினும், இக்கல்வெட்டை தொல் எழுத்தாய்வாளர்கள் மேலும் ஆய்வு செய்து தமிழ் உலகுக்கும், தமிழக வரலாற்றுக்கும் ஆக்கம் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com