டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு

டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பாசனத்துக்காகக் கல்லணை சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. இதன்மூலம் சுமார் 10.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கல்லணை திறப்பிற்கு பின்னர் காவிரியில் பாய்ந்தோடும் தண்ணீர்.
கல்லணை திறப்பிற்கு பின்னர் காவிரியில் பாய்ந்தோடும் தண்ணீர்.

டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பாசனத்துக்காகக் கல்லணை சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. இதன்மூலம் சுமார் 10.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 20-ஆம் தேதி காலை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக வினாடிக்கு 12,000 கனஅடி வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் தண்ணீர் வெள்ளிக்கிழமை இரவு கல்லணைக்கு வந்தது. இதையடுத்து டெல்டா பாசனத்துக்காக கல்லணையிலிருந்து காவிரியில் சனிக்கிழமை பகல் 11 மணியளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அமைச்சர்கள் ஆர். காமராஜ், ஓ.எஸ். மணியன், இரா. துரைக்கண்ணு, வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் தண்ணீரை திறந்துவிட்டு, மலர் தூவி வணங்கினர். இதைத் தொடர்ந்து, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்திலும் தண்ணீரை திறந்துவிட்டனர்.
அப்போது, கல்லணையிலிருந்து வினாடிக்குக் காவிரி, வெண்ணாற்றில் தலா 3,600 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,000 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 800 கனஅடி வீதமும் என மொத்தம் வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
காவிரி பாசனப் பகுதி ஆறுகளில் தண்ணீர் கடைமடைக்குச் சென்றடைந்த பிறகு காரைக்கால் பாசனப் பகுதிக்கு உரிய நீர் பங்கீடு செய்யப்படும் என்றும், கொள்ளிடத்தில் உரிய விகித அடிப்படையில் தண்ணீர் தொடர்ந்து விடப்படும் எனவும் பொதுப் பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
தண்ணீர் திறப்பு மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.30 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 3.76 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 3.36 லட்சம் ஏக்கரிலும் என மொத்தம் 10.41 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினர்கள் கு. பரசுராமன் (தஞ்சாவூர்), ஆர்.கே. பாரதிமோகன் (மயிலாடுதுறை),
ஆர்.பி. மருதராஜா (பெரம்பலூர்), ஆட்சியர்கள் ஆ.அண்ணாதுரை (தஞ்சாவூர்), கே.எஸ். பழனிச்சாமி (திருச்சி), சூ.பழனிச்சாமி (நாகை), இல.நிர்மல்ராஜ் (திருவாரூர்), திருச்சி மேயர் அ.ஜெயா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.கோவிந்தராசு (பேராவூரணி), பாரதி (சீர்காழி), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), பவுன்ராஜ் (பூம்புகார்), செல்வராஜ் (முசிறி), பரமேஸ்வரிமுருகன் (மண்ணச்சநல்லூர்), பொதுப்பணித் துறைத் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com