இளைப்பாற இடமில்லை அவதிப்படும் 108 ஊர்திப் பணியாளர்கள்

சாமானிய மக்களின் அவசர மருத்துவத் தேவைகளை ஓய்வறியாது நிறைவேற்றி வரும் 108 அவசரகால ஊர்திப் பணியாளர்கள் இளைப்பாற...
இளைப்பாற இடமில்லை அவதிப்படும் 108 ஊர்திப் பணியாளர்கள்

சாமானிய மக்களின் அவசர மருத்துவத் தேவைகளை ஓய்வறியாது நிறைவேற்றி வரும் 108 அவசரகால ஊர்திப் பணியாளர்கள் இளைப்பாற வழியின்றிச் சிரமப்படும் நிலையைக் களைய வேண்டுமென, அதில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவில் ஆம்புலன்ஸ் சேவையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது 108 திட்டம்தான். முதலாவதாக, 2005-ஆம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை ஆந்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆந்திர மாநில அரசும்,Emergency Management and Research Institute (EMRI) நிறுவனமும் கூட்டாக இந்தச் சேவையை அறிமுகப்படுத்தின. பிறகு EMRI நிறுவனம் இந்தியாவில் ஆந்திரம், தமிழ்நாடு, குஜராத், உத்ரகண்ட், கோவா, கர்நாடகம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து தனது சேவையை விரிவுபடுத்தியது.

தற்போது நாடு முழுவதும் 4,500-க்கும் மேற்பட்ட 108 சேவை ஊர்திகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 15.9.2008 அன்று 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. மாநிலத்தில் தற்போது சுமார் 775-க்கும் மேல்பட்ட 108 ஊர்திகள் சேவையில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சேவை தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 4.11 லட்சம் உயிர்களையும், 2016, செப்டம்பர் மாதம் வரை சுமார் 23 லட்சம் உயிர்களையும் காப்பற்றியுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இந்தச் சேவை பிரசவ இறப்பு விகிதத்தைப் பெருமளவில் குறைத்துள்ளது. லட்சக்கணக்கான பிரசவத்துக்குச் சேவையாற்றியுள்ளது. முன்பெல்லாம் உயிருக்கு ஆபத்தான தருணங்களில் அவசர உதவிக்காகக் காத்திருந்து ஏங்கிய நிலையை மாற்றியுள்ளது 108 ஊர்தி சேவை.

இத்தகைய அத்தியாவசியச் சேவையாற்றி வரும் 108 அவசர கால ஊர்திகளில் தமிழகத்தைப் பொருத்தவரை 1,500 பெண்கள் உள்பட சுமார் 3,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசுப் பணி கிடையாது,

அர்ப்பணிப்புடன், சேவையாற்றும் மனது உள்ளவர்கள்தான் இந்தப் பணியில் சேரலாம் என்பன போன்ற வழிகாட்டுதல்களுடன் பணியில் சேர்க்கப்பட்டனர். ரூ. 4500-இல் தொடங்கிய ஊதியம் தற்போது ரூ. 8500 வரை அளிக்கப்படுகிறது. இதில், இஎஸ்ஐ-க்கு ரூ.120-ம், வருங்கால வைப்பு நிதிக்காக ரூ. 480-ம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு ஷிப்டுக்கு 12 மணி நேரம் என்கிற கணக்கில் 24 மணி நேரமும் பணியாற்றி வரும் நிலையில், வாகனங்களை எங்கு நிறுத்துவது, அதில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள் குறிப்பாக பெண் ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் இளைப்பாறுவதற்கான எந்தவிதமான இட வசதிகளும் இல்லை. இதன் காரணமாக, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய வளாகங்கள், தீயணைப்பு நிலையங்கள், வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் ஊர்திகளை நிறுத்துவதும், இளைப்பாறுதல், இயற்கை உபாதைகளைக் கழிப்பது, குளித்துவிட்டு உடை மாற்றுவது போன்ற அடிப்படைத் தேவைகளை அந்தந்த இடங்களில் உள்ள அலுவலர்களின் அனுமதி பெற்று நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய நிலையே கடந்த 8 ஆண்டுகளாக நீடிக்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு தாமதமின்றி தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட 108 ஊர்தி ஊழியர்கள் சங்க மாவட்டத்தலைவர் மா. சுபாஷ்சந்திரபோஸ் கூறியதாவது:

மாவட்டத்தில் 108 ஊர்திகள் 19-ம், ஓர் இரு சக்கர வாகனம் உள்பட மொத்தம் 20 ஊர்திகள் சேவையாற்றி வருகின்றன. இவற்றில், ஓர் ஊர்திக்கு 4 பேர் ( 2 பெண் செவிலியர்கள், 2 ஓட்டுநர்கள்) வீதம் ஊழியர்கள் சொற்ப ஊதியத்தில் 24 மணி நேரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சேவை தொடங்கிய 2 ஆண்டுகள் மட்டுமே எந்தவிதச் சிக்கல்களும், தடங்கல்களும் இன்றி வாகனங்கள் இயங்கி வந்தன. நாளடைவில் வாகனங்கள் தேய்மானம் காரணமாக ஏற்படும் பழுதுகளால், குறிப்பாக டயர் பழுதாகி வாகனங்கள் நடு வழியில் நிற்கும் போது, அடுத்த வாகனத்தில் மாற்றி அனுப்பும் வரை அதிலுள்ள நோயாளி காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், எளிய கிராம மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் குறைகளை நீக்கி பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணிப் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் எங்களுக்கு, தங்குவதற்கோ, இளைப்பாறுவதற்கோ, இயற்கை உபாதையைக் கழிப்பதற்கோ உரிய வழியின்றி தவித்து வருகிறோம்.

புதுகை அரசு தலைமை மருத்துவமனையில் பயனற்றுக் கிடந்த ஓர் அறையை இதுவரை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். தற்போது அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுப்பாட்டில் இந்த மருத்துவமனை வந்துவிட்டதாகவும், இடத்தைக் காலி செய்துவிட்டு வேறு எங்காவது போக வேண்டும் என்ற நெருக்கடிக்கும் தற்போது ஆளாகியுள்ளோம்.

இதற்கு மாற்று ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு மருத்துவமனைகளிலேயே அதிகம் செயல்படுத்துவதைப் போல, அதற்கு உறுதுணையாக இருக்கும் 108 ஊர்தி சேவையையும் அரசே நிர்வகிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com