கன்னியாகுமரியில் பூம்புகார் படகுத் தளத்தை 200 படகுகளில் முற்றுகையிட்ட மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே இனயத்தில் அமைக்கப்படவுள்ள வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரியில் உள்ள...
கன்னியாகுமரியில் பூம்புகார் படகுத் தளத்தை 200 படகுகளில் முற்றுகையிட்ட மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே இனயத்தில் அமைக்கப்படவுள்ள வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் படகுத் தளத்தை 200 படகுகளில் வந்த மீனவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை காலை தேங்காய்ப்பட்டினத்திலிருந்து கன்னியாகுமரிக்கு மீனவர்கள் படகுப் பேரணி நடத்தினர்.
தேங்காய்ப்பட்டினத்தில் தொடங்கிய இந்தப் பேரணி முள்ளூர்துறை, இனயம், மிடாலம், குறும்பனை, வாணியக்குடி, குளச்சல், கடியப்பட்டினம், முட்டம், இராஜாக்கமங்கலம், பெரியகாடு, மணக்குடி, கோவளம் வழியாக கன்னியாகுமரி சென்றடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட படகுகளில் திரளான மீனவர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு இயக்குநர் ஸ்டீபன் தலைமை வகித்தார். குளச்சல் நகர்மன்ற முன்னாள் தலைவர் சேசையா முன்னிலை வகித்தார். ஆலஞ்சி வட்டார முதன்மை பணியாளர் ஏசுதாசன் பேரணியைத் தொடங்கிவைத்தார்.
இதில், குமரி மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் ஜோர்தான், தேசிய மீனவர் சங்கச் செயலர் ஜார்ஜ் ராபின்சன், திமுக மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர் வலம்புரிஜான், மகேஷ், சர்ஜ்ஜில், வில்பிரட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திடீர் முற்றுகை: கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் பின்பகுதி வழியாக பூம்புகார் படகுத் தளத்துக்கு வள்ளங்களில் வந்த மீனவர்கள், சுற்றுலாப் பயணிகளை விவேகானந்தர் பாறைக்கு அழைத்துச் செல்லும் பொய்கை மற்றும் விவேகானந்தா படகுகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படகினுள் தவித்தனர். மேலும், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து கரைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் பிற்பகல் 1.30 மணிவரை நீடித்தது. அதன்பிறகு மீனவர்கள் வள்ளங்களில் சென்றதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நிலைமை சீரானது.
பாதுகாப்புக் குறைபாடு: "இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்போது சுற்றுலாப் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்ய வேண்டியது அவசியம் அல்லது படகு சேவையை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், இங்கு பயணிகளுக்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. மீனவர்கள் சுற்றுலாப் படகுகளைச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டபோது நாங்கள் செய்வதறியாமல் தவித்தோம்' என சுற்றுலாப் பயணிகள் பலர் அதிருப்தி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com