ஜெயங்கொண்டம் சாலை விபத்தில் 12 பேர் உயிரிழப்பு: ராமதாஸ் இரங்கல்

ஜெயங்கொண்டத்தை அருகே நேற்று நிகழ்ந்த சாலைவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


சென்னை: ஜெயங்கொண்டத்தை அருகே நேற்று நிகழ்ந்த சாலைவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கச்சிபெருமாள் என்ற இடத்தில் நேற்று மாலை நிகழ்ந்த சாலைவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் நலம் பெற விழைகிறேன்.

கச்சிபெருமாள் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவர்களின் வாகனம் மீது சிமிட்டி சரக்குந்து மோதியதால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதில் உயிரிழந்த 12 பேரில் 10 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிமிட்டி சரக்குந்து அதிக வேகத்தில் வந்து மோதியது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் சிமிட்டி ஆலைகள் அதிகம் உள்ள நிலையில், அங்கு சிமிட்டி ஏற்றச் செல்லும் வாகனங்களால் தான் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோவில் அருகே பேரூந்து மீது சிமிட்டி சரக்குந்து மோதியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். சிமிட்டி சரக்குந்துகளின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது தான் இத்தகைய விபத்துக்களுக்கு காரணம் ஆகும். அந்த வகையில்  அப்பாவி மக்கள் 12 பேரின் உயிரிழப்புக்கு தமிழக அரசும், காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும்.

கச்சிபெருமாள் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அவரது தகுதிக்கேற்ற அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல் காயமடைந்த 13 பேருக்கும் உயர்சிறப்பு மருத்துவமனையில் சிறப்பான மருத்துவம் அளிப்பதுடன் தலா ரூ 5 லட்சம் நிதி உதவி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com