பலன் தருமா புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம்?

பாரதப் பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் சில பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளதாக தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.
பலன் தருமா புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம்?

-ஜி. சுந்தரராஜன்பாரதப் பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் சில பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளதாக தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. எனவே, இந்தத் திட்டம் போதிய பலன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், வெள்ளம், வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் முக்கியப் பயிர் வகைகளுக்கு 1985 ஆம் ஆண்டு முதல் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கி வருகிறது. தமிழகத்தில் இந்தத் திட்டம் கடந்த 20 ஆண்டுகளில் விவசாயிகளை பெருமளவில் சென்றடையவில்லை.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்குப் பிறகு பயிர்க் காப்பீடு குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே அதிகரித்தது.

தமிழகத்தில் 2000 முதல் 2002-ஆம் ஆண்டு வரை மாவட்ட அளவிலும், 2002 முதல் 2004-ஆம் ஆண்டு வரை வட்ட அளவிலும், 2004 முதல் 2006 வரை ஒன்றிய அளவிலும் மகசூல் இழப்பீடு அறுவடைப் பரிசோதனை என்ற வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

2006-ஆம் ஆண்டு முதல் பிர்கா அளவில் செயல்படத் தொடங்கிய பிறகுதான் இந்தத் திட்டம் குறித்த ஆர்வம் விவசாயிகளிடையே மேலும் அதிகரித்தது.
2000}ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்தில் கடன் பெற்ற விவசாயிகள் மட்டுமே இணைந்து பயன் பெற்று வந்த நிலையில், 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடன் பெறாத விவசாயிகளும் சேர்க்கப்பட்டனர்.

பிர்கா அளவில் செயல்படும் இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு முழுமையாக இழப்பீடு கிடைக்கப் பெறவில்லை என்ற காரணத்தால், தனிநபர் விவசாய காப்பீட்டுத் திட்டம் வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு 2010-ஆம் ஆண்டு கிராம அளவில் பரிசோதனை முறையில் செயல்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்டத்தில் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தையும், நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றியத்தையும் தேர்ந்தெடுத்து அமல்படுத்தியது. ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தத் திட்டம் தொடக்கத்திலேயே கைவிடப்பட்டது.

பிர்கா அளவில் செயல்பட்டு வந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பெயரளவிலே நடந்து வந்த நிலையில், 2011-ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கிராம அளவில் மகசூல் இழப்பு பரிசோதனை அடிப்படையில் செயல்படத் தொடங்கியது.

இந்த் திட்டம் 2016 ஆம் ஆண்டு புதிய வடிவம் பெற்று, கிராம அளவில் மகசூல் இழப்பு பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தும் பொருட்டு, பாரதப் பிரதமரின் தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் மூன்று கட்டங்களாக பாதிப்புகளை பிரித்து அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1. தட்பவெப்ப மாற்றத்தால் உரிய நேரத்தில் மழை இல்லாமல் நேரடி விதைப்பு செய்த விதை முளைக்காமல் போவது அல்லது நடவு செய்த நாற்று போதிய தண்ணீர் இல்லாமல் காய்ந்து போவது.

2. சாகுபடிக் காலத்தில் வெள்ளம், வறட்சி, பூச்சி தாக்குதல், தீ விபத்து, மண் அரிப்பு, புயல், சூறாவளி போன்றவறறால் பயிர்கள் பாதிப்பது.

3. பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் தொடர் மழை, புயல், சூறாவளி போன்றவற்றால் பாதிப்பது ஆகிய மூன்று வழிகளில் பயிர்களுக்கு மகசூல் இழப்பீடு கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநிலச் செயலர் கே.எஸ்.பி. ரவீந்திரன் தெரிவித்ததாவது:

கடந்த காலங்களில் செயல்பட்ட திட்டத்தில் அறுவடை மகசூல் பரிசோதனை மூலம் ஒரு முறை மட்டுமே மகசூல் பாதிப்பு கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டது. புதிய திட்டத்தில் மூன்று கட்டங்களாகக் கணக்கிடப்பட்டு இழப்பீடு வழங்கும் முறை வரவேற்கத்தக்கது.

கடந்த காலங்களில் சராசரி கணக்கெடுப்பு என்பது 5 ஆண்டுகளின் சராசரி விளைச்சல் மகசூல் அளவை எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு ஆண்டுகள் மிகவும் பாதிக்கப்பட்ட ஆண்டுகளாகக் கருதி அவற்றைத் தவிர்த்து மற்ற மூன்று ஆண்டுகளின் மகசூல் அளவின் சராசரியோடு நிகழாண்டு மகசூல் அளவை ஒப்பிட்டு இழப்பீடு வழங்குவது நடைமுறையில் இருந்தது.

ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கணக்கெடுப்பு என்பது கடந்த 7 ஆண்டுகளின் சராசரி விளைச்சல் அளவை எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு ஆண்டுகள் மிகவும் பாதிக்கப்பட்ட ஆண்டுகளாகக் கருதி அவற்றைத் தவிர்த்து மற்ற 5 ஆண்டுகளின் மகசூல் அளவின் சராசரியோடு நிகழாண்டு மகசூல் அளவை ஒப்பிட்டு இழப்பீடு வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறை விவசாயிகளுக்கு முற்றிலும் பாதகமாக உள்ளது. கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் 80 பாதிப்பு முழுமையான பாதிப்பாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் புதிய திட்டத்தில் ஒரு ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்பட்டால் 70 பாதிப்பு மட்டுமே முழுமையான பாதிப்பாகக் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பாதகமான அம்சம்.
அனைத்துப் பயிர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட பயிர்க் கடன் அளவே மகசூல் இழப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கூடுதல் மகசூல் இழப்புத் தொகை பெற வழிவகை செய்யப்படவில்லை. இது ஏமாற்றம் தருவதாய் உள்ளது.

நிகழாண்டில் இந்தத் திட்டத்துக்கு மானியத் தொகையாக மத்திய அரசு ரூ. 500 கோடியும், மாநில அரசு ரூ. 239.51 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளன.

தமிழக முதல்வர் தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை ஆய்வு செய்து பாதகமான அம்சங்களை நீக்கி, தனியார் நிறுவன ஒப்பந்தங்களை ரத்து செய்து, சேவை நோக்கோடு செயல்படும் மத்திய அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com