ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனடியாக தமிழக மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனடியாக தமிழக மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனடியாக தமிழக மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனடியாக தமிழக மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய மிக முக்கியப் பதவியிலிருக்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரை நியமிக்காமல் தாமதம் செய்து கொண்டிருக்கும் பினாமி அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்த சீத்தாராமன் கடந்த 22.3.3017 அன்று ஓய்வு பெற்றுவிட்டார். மாநில தேர்தல் ஆணையர் பதவி என்பது அரசியல் சட்டப் பிரிவு 243K -யின் படி மாநில ஆளுநரால் நியமிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான பதவியாகும். உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள அரசியல் சட்டப் பதவியான மாநில தேர்தல் ஆணையர் ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதுதான் ஒரு பொறுப்புள்ள மாநில அரசின் கடமையாக இருக்க முடியும். ஆனால் எந்த பொறுப்புமே இல்லாமல் கடமையை காற்றில் பறக்க விட்டு விட்டு, ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த “பினாமி” அரசு மாநில தேர்தல் ஆணையரைக் கூட நியமிக்காமல் ஆழ்ந்த நித்திரையில் இருப்பது  மிகுந்த வேதனைக்குறியது.

“உள்ளாட்சி தேர்தல்களை 2016 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானமாகவும், தெளிவாகவும் தீர்ப்பளித்தது. அதை மாநில தேர்தல் ஆணையராக இருந்த சீத்தாராமன் நிறைவேற்ற துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தடை வாங்குவதற்குதான் முயற்சி செய்தாரே தவிர, உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயகத்திற்கு உயிரூட்டும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. “உள்ளாட்சி தேர்தலை நீதிமன்றம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடத்த முடியாது” என்று மீண்டும் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் கூறிவந்தாரே தவிர, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வார்டு மறு சீரமைப்பு, வார்டுகள் ஒதுக்கீடு செய்வதில் உள்ள இட ஒதுக்கீடு குளறுபடிகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட எதையும் மாநில தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. அதிமுக அரசும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உதவிட முன்வரவில்லை.

அரசியல் சட்டப்பிரிவு 243K(3)ன்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணியாளர்களை ஆளுநர் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் தெளிவாக கூறுகிறது. அந்த பணியாளர்களை கொடுப்பதிலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதிலும் மாநில தேர்தல் ஆணையருக்கு அதிமுக அரசு அறவே ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதை உயர்நீதிமன்றத்தின் முன்பே மாநில தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனாலும் உயர்நீதிமன்றம் தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்து ஒவ்வொரு முறையும் தேர்தலை நடத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று சரமாரி கேள்விகளையும், கண்டனங்களையும் எழுப்பி, “மே 14 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று இறுதி கெடு விதித்தது. அந்த இறுதிக் கெடுவையும் நிறைவேற்றாமல் தன் பதவியிலிருந்தே இப்போது ஓய்வு பெற்று சென்று விட்டார் மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன்.

மீண்டும் உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, “மே 14 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது” என்று அடம்பிடித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம். “நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்” என்று இப்போது சென்னை உயர்நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்தை எச்சரித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.  “மாநில தேர்தல் ஆணையர்” இல்லாத ஒரு ஆணையம் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று அராஜகமாக கூறியிருப்பதைப் பார்த்தால் மாநில தேர்தல் ஆணையமும் சரி, அதிமுக அரசும் சரி அரசியல் சட்டத்தை துளியும் மதிக்காமல் ஒட்டு மொத்த பஞ்சாயத்து ராஜை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றன என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. வரலாறு காணாத வறட்சியால் குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காமல் அவதிப்படும் மக்கள் மாநிலம் முழுவதும் ஆவேசமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அடிப்படைப் பிரச்னைகளை தீர்ப்பதில் கூட அக்கறை காட்டாமல் உள்ளாட்சி அமைப்புகளை அதிமுக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் இணைந்து கொண்டு முடக்கி வைத்துள்ளது பேரதிர்ச்சியாக இருக்கிறது.

மாநில தேர்தல் ஆணையர் ஓய்வு பெற்ற பிறகும் கூட புதிய மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க பினாமி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சட்டத்தின் ஆட்சி மீது இந்த அரசுக்கு துளியும் அக்கறை இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது. இதுவரை “டாஸ்மாக்”  நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களை மாநில தேர்தல் ஆணையர்களாக நியமித்துக் கொண்டிருந்த அதிமுக அரசு, இந்த முறை ஓய்வு பெற்ற பிறகும் புதிய மாநில தேர்தல் ஆணையரை நியமிக்காமல் இருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் “தலைமை இல்லாத ஆணையமாக” நின்று ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது அரசியல் சட்ட அமைப்புகள் இந்த ஆட்சியில் எப்படி சீர்குலைந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல், மாநில தேர்தல் ஆணையர் பதவியையும் நிரப்பாமல் அதிமுக அரசு அடாவடியாக ஆர்.கே. நகரில் தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருப்பது ஜனநாயக நெறிமுறைகளை குழிதோண்டி புதைக்கும் கேடு கெட்ட செயல் மட்டுமல்ல- அரசியல் சட்ட மாண்பின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் கொடூரமான செயல். அரசியல் சட்டப் பிரிவு 163-ன்படி மாநில தேர்தல் ஆணையரை நியமனம் செய்தும் தமிழக பொறுப்பு ஆளுநர் அவர்களுக்கு இந்நேரம் கோப்பு அனுப்பியிருக்க வேண்டிய அதிமுக அரசு, ஜனநாயக அகல் விளக்கை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.

ஆகவே, மாநில தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான கோப்பை உடனடியாக தமிழக பொறுப்பு ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக் கொள்கிறேன்.  மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கும் கோப்பை முதல்வர் அனுப்பத் தவறினால், அரசியல் சட்டப் பிரிவு 167(b)-ன் கீழுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில தேர்தல் ஆணையர் நியமிப்பது தொடர்பான கோப்பை தமிழக பொறுப்பு ஆளுநரே கேட்டுப் பெற்று, உடனடியாக தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com