அசோகமித்திரனின் புகழ் அடுத்த நூற்றாண்டிலும் நீடிக்கும்: கவிஞர் வைரமுத்து

எழுத்தாளர் அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் அடுத்த நூற்றாண்டிலும் இருப்பார்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசுகிறார் கவிஞர் வைரமுத்து.
மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசுகிறார் கவிஞர் வைரமுத்து.

எழுத்தாளர் அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் அடுத்த நூற்றாண்டிலும் இருப்பார்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

எல்லா மனிதர்களுக்கும் இரண்டு மரணங்கள் உண்டு. முதல் மரணம் பெளதீக மரணம், இறந்த பிறகும் அவனை நினைத்துக் கொண்டிருக்கும் கடைசி மனிதன் இறக்கும் போதே அந்த இரண்டாவது மரணம் நிகழும். அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் அடுத்த நூற்றாண்டிலும் இருப்பார்கள்.

அவரது எழுத்து அலங்காரமில்லாமல், எளிமையாக இருக்கும். பெரும் விளம்பரத்தை விரும்பாத அவர், வணிகச் சந்தையிலும் நல்ல எழுத்துகளையே எழுதினார்.

சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொண்டவர்களே எழுத்தாளர்கள் என்பதை அறிந்தவர் அவர். அரசியல், மதம், சமூக வெளிகளைச் சாராமல் ஓர் எழுத்தாளன் அதிர்வுகளை ஏற்படுத்த முடியாது. தமிழகத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் மட்டும்தான் பொதுத் தளங்களில் கவனிக்கப்படுகிறார்கள். அந்த பின்புலத்தை அடைய விரும்பாதவர், வெறுத்தவர் அவர்.

அசோகமித்திரனின் படைப்புகளில் ஆகச் சிறந்த கதை "பிரயாணம்'. அவருக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற ஏக்கம் பலருக்கும் உண்டு. ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள பழகிக் கொண்டவர் அவர். உண்மையான விருது என்பது அந்த எழுத்தாளனின் எழுத்தை சமகால சமூகம் வாசித்து, வலியை உணர்ந்து, அவன் இறக்கி வைத்த சுமையை ஏற்றுச் சுமப்பதே. வட்டார இலக்கியம், சமகால இலக்கியம், மற்றும் உலக இலக்கியம் என மூன்றையும் எழுதினார் அவர்.

நிகழ்காலத் தலைமுறை, எழுத்தாளனை விருப்பு, வெறுப்புகளுடன் பார்த்து வருகிறது. கூட்டங்களைத் தாண்டி இதயங்களில் வாழும் அசோகமித்திரன் தனது எழுத்துகளால் அடுத்த நூற்றாண்டு வரை நீள்வார். அவருக்குச் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலி அவரது நினைவாக நூலகங்களுக்கு எழுத்தாளர்களின் புத்தகங்களை விமர்சனமின்றி வாங்கி வாசிக்கச் செய்வதே என்றார் அவர்.

எழுத்தாளர் பிரபஞ்சன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், பதிப்பாளர் ரவி சுப்பிரமணியன், கவிதா பதிப்பக உரிமையாளர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் அசோகமித்திரனுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

அசோகமித்திரனின் மகனும் பத்திரிகையாளருமான தி.ராமகிருஷ்ணன் கூட்டத்தில் பங்கேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com