சசிகலாவுக்கு விவிஐபி வசதி: சிறை விதிமுறைகள் மீறப்படுகிறதா?

பெங்களூர் பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் இருக்கும் அதிமுக தாற்காலிகப் பொதுச் செயலர் சசிகலாவுக்கு முக்கிய அந்தஸ்தில் இருக்கும் நபர்களுக்கான சலுகைகள் வழங்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது
சசிகலாவுக்கு விவிஐபி வசதி: சிறை விதிமுறைகள் மீறப்படுகிறதா?


பெங்களூர் : பெங்களூர் பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் இருக்கும் அதிமுக தாற்காலிகப் பொதுச் செயலர் சசிகலாவுக்கு முக்கிய அந்தஸ்தில் இருக்கும் நபர்களுக்கான சலுகைகள் வழங்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

மத்திய சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, சசிகலா கேட்ட வசதிகள் அனைத்தும் மறுக்கப்பட்டதாகவும், சாதாரண அறையிலேயே அவரும் இளவரசியும் அடைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், சசிகலாவுக்கு சிறையில் விவிஐபிக்களுக்கான வசதிகள் வழங்கப்படுவதாக தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை சிறை நிர்வாகம் மறுப்பதாக உடனே விளக்கமும் வந்துவிடும்.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒரு புள்ளி விவரம், விவிஐபி வசதிகள் அளிக்கப்படும் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

அதாவது, சசிகலா சிறையில் அடைக்கப்பட்டது பிப்ரவரி 15ம் தேதி மாலை 6 மணிக்கு. அன்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவர் யாரையும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு மறுநாள் முதல் இன்று வரை அவரை 4 தமிழக அமைச்சர்கள் உட்பட 27 பேர் சிறைக்குச் சென்று சந்தித்துள்ளனர்.

அதாவது சராசரியாக, சசிகலாவை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், சிறை விதிமுறைப்படி, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கைதியை, வாரத்துக்கு ஒருவர் அல்லது 15 நாட்களுக்கு ஒருவர் மட்டுமே சந்தித்துப் பேச முடியும். அப்படியானால், கடந்த 50 நாட்களில் அதிகபட்சமாக 7 அல்லது 8 பேர் தான் அவரை சந்தித்திருக்க முடியும். ஆனால், 7 அல்லது 8 பேர் எப்படி 27 பேர் ஆனது. இந்த ஒரு புள்ளி விவரமே, சசிகலாவுக்காக, சிறை விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. இந்த நிலையில்தான், சசிகலாவுக்கு விவிஐபி வசதிகள் சிறையில் கிடைக்கிறது என்ற சந்தேகம் உறுதியாகிறது.

இதோடு நின்று விடவில்லை இந்த விதிமீறல்கள். சிறைக் கைதிகளை, பார்வையாளர்கள் முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் மட்டுமே பார்க்க அனுமதி வழங்கப்படும். ஆனால், சசிகலாவை பார்க்க வரும் பார்வையாளர்கள் பொதுவாக மாலை 5 மணிக்குப் பிறகே அவரை சந்தித்துப் பேசி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com