வரம்பு மீறி வருமான வரி சோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதலின் பேரில் என் வீட்டில் வருமான வரித் துறையினர் வரம்பை மீறி சோதனை நடத்தி வருகின்றனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
வரம்பு மீறி வருமான வரி சோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதலின் பேரில் என் வீட்டில் வருமான வரித் துறையினர் வரம்பை மீறி சோதனை நடத்தி வருகின்றனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்தே வருமானவரித் துறையினர் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் திடீர் சோதனை நடத்தினர். சோதனை நடப்பது தெரிந்ததும் அவரது வீட்டின் முன்பு ஏராளமான அதிமுகவினர் திரண்டனர்.
ஆதரவாளர்களை அங்கு இருந்த கிளம்பிச் செல்லுமாறு சிஆர்பிஎப் வீரர்கள் அறிவுறுத்தினர். ஆனால் தொடர்ந்து வருமானவரித் துறையினருக்கும், ஓபிஎஸ்ஸுக்கு எதிராகவும் அதிமுகவினர் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.
இந்நிலையில் விஜயபாஸ்கர் தனது வீட்டில் இருந்து வெளியில் வந்து அதிமுகவினரை சமாதானப்படுத்தினார். அவர் தனது பெண் குழந்தையையும் அழைத்து வந்திருந்தார். இந்த சோதனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:
ஓ.பி.எஸ். அணியினரின் தூண்டுதலின் பேரில்தான் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணி முதலே என் வீட்டில் சோதனை நடத்தினர். பாதுகாப்புப் படையினரும், வருமானவரித் துறை அதிகாரிகளும் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். என்றாலும் நான் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தேன். அவர்கள் எனது வீட்டில் எல்லா இடத்திலும் சோதனை நடத்த அனுமதித்தேன்.
எனது வீட்டில் சோதனை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில் எதுவும் சிக்கவில்லை. என்னுடைய பீரோ, அலுவலக மேஜை அறைகள் உள்பட குளியறையில் கூட சோதனை நடத்த வருமானவரித் துறையினரை அனுமதித்தேன். என்னுடைய குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக்கூட தடை விதித்தனர், என் மனைவியை சமைக்கக் கூடாது என வருமான வரித் துறையினர் தடை விதித்தனர்.
இந்த சோதனையில் ரூ.10,000-த்தைக்கூட அதிகாரிகள் எனது வீட்டிலிருந்து எடுக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நிரபராதி. என்றாலும் வேண்டுமென்றே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு ஆதரவு தெரிவித்த சரத்குமாருக்கு எவ்வளவு பணம் அளித்தீர்கள் என கேள்வி கேட்டனர். நான் எதற்கு சரத்குமாருக்கு பணம் தரவேண்டும். தினகரனுக்கு முழு வீச்சில் தேர்தல் பணி செய்வதால் என் வீட்டில் சோதனைநடத்தப்பட்டுள்ளது. சீப்பை ஓளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என நினைக்கிறார்கள், டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போவது உறுதி.
இந்தியாவில் தலைசிறந்த மருத்துவ சேவையை வழங்கிய மாநிலத்துக்காக தமிழக அரசுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை எனக்கு விருது அளிக்க இருந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் செயல்படும் இந்த அரசுக்கு நல்ல பெயர் வந்துவிட கூடாது என்பதற்காக நான் தில்லி சென்று விருது பெறுவதையும் தடுத்து விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com